சென்னை: ‘தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பாஜகவின் தூண்டுதலின் பேரில் திமுக மற்றும் அதிமுகவுடன் தொடர்புகளை ஆரம்பித்தது. மேலும் மறைமுக வேலைகள் நடந்தது காங்கிரஸ் தலைமைக்கு கவலைகளை ஏற்படுத்தியது. அதனைப் பற்றி பேசாமல் காங்கிரஸ் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறுவது நியாயமானது இல்லை’ என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மூத்த தலைவர் வைகோவுக்கும், அவர் பொது வாழ்க்கைக்கு ஆற்றிய நீண்டகால பங்களிப்புக்கும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எனினும், உரிய மரியாதையுடன் நான் தெளிவுபடுத்த விரும்புவது என்னவெனில், நன்றியுணர்வு குறித்த கேள்வியைப் பொறுத்தவரை, அரசியல் கூட்டணிகள் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.
மே 4-ஆம் தேதி மதியம் 3 மணியளவில் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோதே, பாஜக/ஆர்எஸ்எஸ் தரப்பின் முயற்சியின்படி திமுக மற்றும் அதிமுகவுடன் தொடர்புகள் மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகள் தொடங்கியது. பாஜகவின் தூண்டுதலின் பேரில் திமுக, எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவுடன் தொடர்புகளை ஆரம்பித்தது. மேலும் மறைமுக வேலைகள் நடந்தது இயல்பாகவே காங்கிரஸ் தலைமைக்கு கவலைகளை ஏற்படுத்தியது.
இத்தகைய சூழ்நிலையில், அந்தக் கவலைகளைப் பற்றி பேசாமல் காங்கிரஸ் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறுவது நியாயமானதோ அல்லது நடைமுறைக்கு ஏற்றதோ அல்ல.
இண்டியா கூட்டணியில் உள்ள எங்கள் மதிப்புக்குரிய சகாக்கள், திமுகவுடனான தங்களின் ஏமாற்றங்கள் அல்லது கருத்து வேறுபாடுகளில் காங்கிரஸ் கட்சியை இழுத்துச் செல்ல வேண்டாம் என்று நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
காங்கிரஸ் தனது கொள்கைகள், தனது தொண்டர்கள், பரஸ்பர மரியாதை மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இண்டியா கூட்டணியை வலுப்படுத்தும் தனது உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து நிற்கும்’ என்று கூறியுள்ளார்.