நயினார் நாகேந்திரன்
சென்னை: “2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலும் மேகேதாட்டு அணைக்கான திட்ட அறிக்கையை நிராகரித்து, அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்தி வைத்திருப்பது மத்திய பாஜக அரசுதான்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நீங்கள் பேசுவது ‘வாழைப்பழக் காமெடி’ போல் இருக்கிறது மாணிக்கம் தாகூர். தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் மேகேதாட்டு அணையை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாக எங்கேயும் தரவுகள் இல்லை. கடந்த 2019 முதல் தற்போது வரையிலும் மேகேதாட்டு அணைக்கான திட்ட அறிக்கையை நிராகரித்து, அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்தி வைத்திருப்பது மத்திய பாஜக அரசு தான்.
தமிழகமும் உறுப்பினராக உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்க முடியாது என்பதை மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
ஆக, மேகேதாட்டு அணை விவகாரத்தில் முழு உரிமையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உள்ளது. ஆனால், உங்கள் கர்நாடக காங்கிரஸ் அரசு தான் CWMA காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை, சரியான நேரத்திற்கு திறந்துவிடாமல் இழுத்தடித்தது.
தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்தது. தமிழகத்தில் நீர்நிலைகளை வணங்கி, வழிபடும் ஆடிப் பெருக்கு திருநாளான இன்று, பொங்கிப் பெருக வேண்டிய காவிரி நதி வறண்டு போய் பாலைவனமாக காட்சியளிப்பதற்கு உங்கள் கர்நாடக காங்கிரஸின் ஆணவமும், உங்கள் கூட்டணி கட்சியான தவெக அரசின் அலட்சியமும் தான் காரணம்.
அப்படியிருக்கையில், கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் உங்கள் காங்கிரஸ் அரசுக்கும், தமிழகத்தில் நீங்கள் கூட்டணியில் இருக்கும் தவெக அரசுக்கும் இடையில் பாலமாக செயல்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தி, மேகேதாட்டு அணை விவகாரத்திற்கு முட்டுக்கட்டை போட முடியாத நீங்கள், எதற்கெடுத்தாலும் எங்களை குறை கூறுவது நகைப்பிற்குரியது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான வாழைப்பழக் காமெடியை போல “இன்னொரு பழம் தான் இது” என மக்களை மடைமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
எனவே, காலங்காலமாக காவிரி நீரை வைத்து அரசியல் செய்வது காங்கிரஸ் தான் என்பது ஊருக்கே தெரியும். தமிழர்களின் உரிமைகளை விட்டுக் கொடுப்பதில் கைதேர்ந்த கட்சி காங்கிரஸ் என்பதற்கு வரலாறுகள் பல உண்டு.
காவிரி நீர் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஆரோக்கியமான விவாதங்கள் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, இப்படி பழிபோடும் விளையாட்டில் நேரத்தை செலவிடக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.