சென்னை: இந்து சமூக சடங்குகளை, சமுதாயத்தில் ஒரு பிரிவினரை இழிவுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை என்றும், இது சட்டவிரோதமான செயல் என்றும், இத்தகையோர் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரண்டு தினங்களுக்கு முன்னர் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் குடும்ப நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் அவரவர் குடும்ப வழக்கப்படி சம்பிராதாய நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அவரவர் விருப்பப்படி அவரவர் நிகழ்ச்சிகளை நடத்திகொள்ள இந்திய அரசியல் சாசன சட்டம் உரிமை அளிக்கிறது. மேலும், எந்த ஒரு சமூகத்தை அநாகரிகமாக, அவதூறாக பேசினால் சாதி காழ்ப்புணர்ச்சி சட்டம் தண்டிக்கும். தண்டிக்க வேண்டும்.
இதுகுறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி, திமுகவை சார்ந்த சுப. வீரபாண்டியன், எம்.பி. செந்தில் மற்றும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். ஒருவரது உணவு விஷயத்தில், அது அவர்கள் உரிமையென பேசுபவர்கள், குடும்ப உணர்வு விஷயத்தில் தலையீட்டு கருத்து தெரிவிப்பது அநாகரிகமான செயல். மேலும், அவர்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி மனம் புண்படுத்துவதாகும்.
திமுகவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தின் வழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். அதில் எந்த கேள்வியும் யாரும் கேட்பதில்லை. இந்த தலைவர்கள் யாரும் அங்கு முன் நிற்கக்கூட முடியாது. மணப்பதிவேடு எடுத்து கொடுப்பதோ, மோதிரம் தருவோதோ என எந்த மத சடங்குகளிலும் இவர்களை மதிக்க மாட்டார்கள் என்பதே உண்மை. அங்கு தமிழ் பின்தள்ளி அவர்கள் மொழிதான் முன் நிற்கிறது. இது குறித்து என்றாவது வாய் திறக்க இவர்களுக்கு தைரியம் உண்டா?
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குடும்ப நிகழ்ச்சியில் இவர்கள் புத்தி சொல்லுவது ஒருபுறம், இதை காரணம் காட்டி அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரது சமூக இணக்கத்தை சிலர் அவமானப்படுத்துவதை காண முடிகிறது.
எனவே சமூக ஊடங்களிலும் பொது வெளியிலும் இந்து சமூகத்தின் சடங்குகளை இந்து சமூகத்தின் எந்த பிரிவினரையும் கேவலப்படுத்துவதை இந்து முன்னணி பொறுத்துக்கொள்ளாது. அவர்கள் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்.
தமிழக அரசும், காவல் துறையும் சாதியை கேவலப்படுத்தி, சாதி கலவரத்தை, சாதி வன்மத்தைத் தூண்டுவோர், மத நம்பிக்கைகளை கேவலப்படுத்துவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.