சென்னை: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் பொறித்த கல்வெட்டை இன்னும் ஒரு வாரத்துக்குள் சீரமைத்துத் தரவில்லை என்றால் திமுக சார்பில் ,மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என, திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த திமுக ஆட்சியில் ரூ.1516.82 கோடி மதிப்பீட்டில், நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் இரண்டாவது திட்டத்தை அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தென்சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் இத்திட்டத்தை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த மு.க.ஸ்டாலினின் பெயர் பொறித்த கல்வெட்டை, தற்போதைய தவெக அரசு சிதைத்து அகற்றியுள்ளது.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒரு வாரத்தில் சரி செய்வதாக உறுதியளித்துள்ளனர். அகற்றப்பட்ட கல்வெட்டை இன்னும் ஒருவார காலத்துக்குள் மீண்டும் அதே இடத்தில் சீரமைத்து வைக்கவில்லை என்றால், திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
தவெக அரசு பதவிக்கு வந்த பிறகு ஒரு புதிய திட்டத்தைக் கூடச் செயல்படுத்தவில்லை. டிஎன்பிஎஸ்சி மூலமாக 401 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம், பத்திரப்பதிவுத் துறையின் 'ஸ்டார் 3.0' திட்டம் போன்றவை திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டவை. தற்போதைய அரசு வெறும் பணி நியமன ஆணையை மட்டுமே வழங்கியுள்ளது.
`நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை `திறன் மேம்பாடு' எனப் பெயர் மாற்றியுள்ளனர். மேலும், பயனடைந்த மாணவர்களின் வீடியோ பதிவுகளை இணையத்திலிருந்து நீக்கியுள்ளனர். செய்தி மக்கள் தொடர்புத் துறையை தவெகவின் ஐடி விங் போலப் பயன்படுத்தி வருகின்றனர்.
முதல்வர் விஜய் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையையும், கல்வெட்டுகளை நீக்கும் வேலையையும் விடுத்து, புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
தவெக எம்எல்ஏ சரவணன் தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகாரை திசை திருப்புவதற்காக, தன்னிடம் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாக ஆடியோ வெளியிட்டு நாடகமாடுகிறார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பதில் சொல்லாமல், தங்களது ஆலோசகர்கள் எழுதிக் கொடுக்கும் திரைக்கதையை வைத்து எம்எல்ஏக்கள் நடிக்கிறார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக திமுக தொடர்ந்து போராடி வருகிறது.
தற்போதைய முதல்வரின் செயல்பாடுகளை 6 மாதங்களுக்கு வேடிக்கை பார்ப்போம். அதன் பிறகு பொதுமக்களே தெருவில் இறங்கிப் போராடும் சூழல் உருவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.