தீபம் ஏற்றும் விவகாரத்தை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பாதையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவை நடை முறைப்படுத்தக் கோரி இந்து அமைப்புகள் வலியுறுத்துவதல், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து கோயில் செயல் அலுவலர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத்தையொட்டி இன்று (டிச. 3) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரிய மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் 6-ம் நூற்றாண்டில் இருந்து கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
தற்போது கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்து, மோட்ச தீபம் ஏற்றும் இடத்தின் அருகே தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது ஆகம விதிகளுக்கு எதிரானது. இவ்வாண்டு முதல் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி, வழக்கு தொடர்ந்த ராமரவிக்குமார் மற்றும் இந்து அமைப்பினர் கோயில் நிர்வாகத்திடம் நேற்று மனுக்களை அளித்தனர்.
‘நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறினால், நாங்களே தீபத்தூணில் தீபம் ஏற்றுவோம்’ என்றும் அவர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மேற்பார்வையில், துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட் டுள்ளனர்.
மலை உச்சியில் உள்ள தீபத்தூணைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மலைக்குச்செல்லும் பாதை,அவனியாபுரம் சாலையில் உள்ள படிக்கட்டுப் பாதை பகுதிகளில் நேற்று இரவு முதலே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.கூடுதல் சிசிடிவிக்கள் பொருத்தி கண்காணிக்கின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, “கோயில் நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுத்தால், உரிய பாதுகாப்பு வழங்கப்படும். ஆனால் யாரும் மலைக்கு மேல் செல்ல அனுமதி கிடையாது’ என்றனர்.
மேல்முறையீடு இதனிடையே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், அதுவரை அந்த உத்தரவை செயல்படுத்த இடைக்காலத் தடைகோரியும் திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் தரப்பில் உயர் நீதிமன்றமதுரை அமர்வில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.