ஜான்சி உமா, பாலாஜி
சென்னை: சென்னை மாநகராட்சியில், மாற்றுத் திறனாளிகளுக்கான நியமன மன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட பா.ஜான்சி உமா மற்றும் பா.பாலாஜி ஆகியோருக்கு மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உறுப்பினர் ஆணையை வழங்கினார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், தமிழக நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் சட்ட மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்
அதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளை ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் நியமன மன்ற உறுப்பினர்களாக நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது.
அதன்படி, இந்த சட்டத்தின் மூலம் தமிழகத்தில் மொத்தம் 13,988 மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடாமல், நியமனம் மூலம் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
அதனடிப்படையில், சென்னை மாநகராட்சி மாமன்றத்திற்கு நியமன மாற்றுத் திறனாளி உறுப்பினர்களாக பா.ஜான்சி உமா மற்றும் பா.பாலாஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, நியமன உறுப்பினர்களுக்கான ஆணையை சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நேற்று வழங்கினார்.