சென்னை: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில், புதிதாக தொடங்கப்படும் ராக்கெட் ஏவுதளத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, 2027 மார்ச் மாதத்துக்குள் முதல் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.
2040-ம் ஆண்டில் இந்தியா மனிதனை நிலவுக்கு அனுப்பி வைக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதற்கேற்ப ஆராய்ச்சிகள், செயல்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு முன்பாக சந்திரயான்-4, சந்திரயான்-5 விண்கலங்கள் அனுப்பப்பட இருக்கின்றன.
தொடர்ந்து, இந்தியா - ஜப்பான் கூட்டு முயற்சியில் உருவாக்கப்படும் சந்திரயான் திட்டமும் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தில் 6,500 கிலோ எடை கொண்ட லேண்டர் மற்றும் 350 கிலோ எடையிலான ரோவர் அனுப்பப்பட இருக்கின்றன. இது 2028-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட இருக்கிறது.
மேலும், இந்தாண்டு பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எல்விஎம் 3 மற்றும் ஆளில்லா ககன்யான் விண்கலம் என அதிகமான ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.