சென்னை: அதிமுக எம்எல்ஏவாக இருந்த இசக்கி சுப்பையா இன்று காலையில் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இசக்கி சுப்பையா. சட்டப் பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவான நிலையில், பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்தனர். இதில் இசக்கி சுப்பையாவும் வேலுமணி அணிக்கு ஆதரவளித்தார்.
நேற்று அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில் இன்று காலையில் இசக்கி சுப்பையாவும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, பனையூரில் உள்ள அலுவலகத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த் முன்னிலையில் இசக்கி சுப்பையா தவெகவில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ 2021 முதல் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்தேன். அப்போது பெரிய அளவில் என்னால் நலத்திட்டங்களை கொண்டு வரமுடியவில்லை. இப்போது என் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு பல நலத்திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தவெகவில் இணைந்துள்ளேன்” என்றார்.