புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ புஸ்ஸி ஆனந்த் வழியாக, முதல்வர் ரங்கசாமிக்கும், தவெக தலைவர் விஜய்க்கும் நீண்ட காலமாக நல்ல நட்பு உள்ளது. பனையூர் சென்று விஜய்யை ரங்கசாமி சந்தித்து பேசி வந்தாலும் அதுபற்றி வெளியில் எப்போதும் வாய் திறந்ததில்லை.
விஜய் கட்சி தொடங்கி முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தியபோது, தனது வீட்டின் அருகில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் வைத்து, புஸ்ஸி ஆனந்த்துக்கு எலுமிச்சம் பழம் கொடுத்து ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்தார். தொடர்ந்து அந்த மாநாட்டை தனது வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் பார்ப்பதை, ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினார். இரண்டாவது மாநாட்டுக்கும் விஜய்யின் பிறந்த ராசி, நட்சத்திரத்தை வைத்து தேதி, நேரம் குறித்துக் கொடுத்தாக பரவலாக பேசப்பட்டது.
என்டிஏ கூட்டணியில் ரங்கசாமி இருந்தாலும் விஜய் மீது தனிப் பாசம் உண்டு. சட்டப்பேரவைத் தேர்தலை தவெகவுடன் இணைந்து சந்திக்கவும் ரங்கசாமி திட்டமிட்டு இருந்த சூழலில், மத்திய அமைச்சர் அமித் ஷா தலையீட்டால், மீண்டும் புதுச்சேரிக்கான என்டிஏ கூட்டணிக்கு ரங்கசாமி தலைமையேற்றுள்ளார். தன் மீதான பல புகார்களுக்கு ரங்கசாமி வாய் திறக்கமாட்டார். அமைதியாக இருந்து திடீரென ஒரு ‘ஃபயர்’ காட்டுவார். இதே முறையை விஜய்யும் அரசியலில் கடைப்பிடிக்கிறார்.
இப்போது ரங்கசாமியைப் போல், விஜய் இரு தொகுதி சென்டிமென்டில் போட்டியிடுகிறார். முதல்வர் ரங்கசாமி கடந்த 2011-ல் என்.ஆர். காங்கிரஸ் தொடங்கிய பிறகு கதிர்காமம், இந்திராநகர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர் இந்திராநகர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அப்போது முதல்வரானார்.
2016-ல் தட்டாஞ்சாவடி தொகுதியில் மட்டும் போட்டியிட்டார். அப்போது எதிர்க்கட்சித் தலைவரானார். ஒரு தொகுதியில் போட்டியிட்டதால் முதல்வராக முடியவில்லை எனக்கருதி, கடந்த 2021-ல் ஏனாம் மற்றும் தட்டாஞ்சாவடியில் போட்டியிட்டார்.
இதில் ஏனாம் தொகுதியில் தோல்வி அடைந்தாலும், தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் முதல்வராகலாம் என்ற சென்டிமென்ட்டால் தற்போது மீண்டும் 3 வது முறையாக 2 தொகுதிகளில் முதல்வர் ரங்கசாமி போட்டியிடுகிறார்.
ரங்கசாமிக்கு மிக நெருக்கமான தவெக தலைவர் விஜய்யும் முதல் முறையாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இதுபற்றி என்ஆர்காங்கிரஸ் - தவெக வட்டாரங்களில் விசாரித்தபோது, “ரங்கசாமியும் விஜய்யும் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். நீண்ட நட்பு உண்டு. தேர்தலின்போது சில ஆலோசனைகளை விஜய்க்கு ரங்கசாமி சொல்லி வருகிறார். அதேபோல் தனது இரு தொகுதி சென்டிமென்ட்டை சொல்லியிருக்கலாம்” என்றனர்.
தமிழகத்தில் ஜெயலலிதா கடந்த 1991-ல் காங்கேயம், பர்கூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்று முதல்வரானார். பின்னர் காங்கேயம் தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். அதையடுத்து 1996-ல் பர்கூரில் மட்டும் போட்டியிட்டு தோற்றார். இதையும் கூட தவெகவில் உயர்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் விஜய்க்கு எடுத்துச் சொல்லியிருக்கலாம். இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து விஜய் இரு தொகுதிகளில் களமிறங்க தீர்மானித்திருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.