தமிழகம்

7 தொகுதிகளின் தேர்தல் முடிவுக்கு பிறகு விழுப்புரம் மாவட்ட திராவிட கட்சிகளில் பிரளயம்?

இரா.தினேஷ்குமார்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் கடந்த 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 7 தொகுதிகளில் வாகை சூடபோவது யார் என்பது அன்றைய தினம் தெரியவரும்.

அதன்பிறகு, விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் திராவிட கட்சிகளில் பெரிய பிரளயம் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளார்.

தமிழகத்தில் இரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டாலும், விழுப்புரம் மாவட்டத்தை பங்கு போடுவதற்கு சி.வி.சண்முகம் அனுமதிக்கவில்லை.

தேர்தலில் வெற்றி வாய்ப்புக்கு ஏதுவாக இருக்கும் என பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியபோது, ‘உங்களுக்கு தேவை 7 தொகுதிகளில் வெற்றி, இதற்கு நானே பொறுப்பு’ என சி.வி.சண்முகம் சவால் விடுத்துள்ளதாக ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், 7 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயம், அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் கள நிலவரம் மாறுபட்டு காணப்படுகிறது.

7 தொகுதிகளும் அதிமுகவுக்கு சாதகமாக இல்லை என உளவுத்துறை கணித்துள்ளது. பாதகம் ஏற்பட்டால், சி.வி.சண்முகத்துக்கு எதிராக, அதிருப்தியில் உள்ள அக்கட்சியினர் போர்க்கொடி தூக்கலாம்.

தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால், மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து சி.வி.சண்முகத்தை மாற்ற வேண்டும் என விழுப்புரம் நகர செயலாளராக இருந்த பசுபதி வலியுறுத்தியது நினைவு கூரத்தக்கது. அதிமுகவின் நிலை இவ்வாறாக இருக்க திமுகவிலும் நெருக்கடி ஏற்படும் என தெரிய வருகிறது.

கட்சி ரீதியாக 3 மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளனர். செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகு திக்கு செஞ்சி மஸ்தானும், விழுப்புரம், வானூர் தொகுதிக்கு லட்சுமணனும் மற்றும் திருக்கோவிலூர், விக்கிரவாண்டி தொகுதிக்கு கவுதம்சிகாமணியும் பொறுப்பாளர்களான உள்ளனர்.

இவர்கள் மூவரும், அவர்களது ஆளு மைக்கு உட்பட்ட தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது அறிவாலயத்தின் கட்டளையாகும். ஆனால், விழுப்புரம் மாவட்ட களத்தில், வெப்ப அலை வேறு மாதிரியாக வீசுகிறது.

7 தொகுதி முடிவுகளின் சாதகம், பாதகம் குறித்து உளவுதுறை மூலம் தலைமை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில், முதல்வர் ஸ்டாலின் எதிர்பார்ப்பது போல், 7 தொகுதிகளையும் கைப்பற்றி விடலாம் என்ற சாதகமான தகவல் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

பொறுப்புக்கு உட்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால், மாற்றம் நிச்சயம் என ஏற்கெனவே தலைமை எச்சரித்துள்ளதால், 3 திமுக பொறுப்பாளர்களின் அஸ்திவாரமும் ஆட்டம் காணலாம்.

திமுக தலைமையின் எச்சரிக்கை ஒருபுறம் இருக்க, தேர்தல் களத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம், அவரது மகன் கவுதமசிகாமணி போட்டியிடும் திருக்கோவிலூர் தொகுதி மட்டுமின்றி 7 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால், ‘கிப்ட்’ காத்திருக்கிறது என முதல்வர் கூறியதாக உடன்பிறப்புகள் கூறி வருகின்றனர்.

நல்ல மாதிரியான தேர்தல் முடிவு வந்தால், அமைச்சர் பதவி தரப்படலாம் அல்லது பொது செயலாளர் பதவி தரப்படலாம் என பொன்முடியின் ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். இந்தத் தேர்தலில் தவெக வருகை யால், வாக்கு வங்கியில் ஆட்டம் காணும் நிலையில் திமுக மற்றும் அதிமுகவில் உள்ளடி வேலையும் பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்துள்ளது.

பழைய பகை, சீட் மறுப்பு, முன்னோ டிகளை புறக்கணித்தது மற்றும் அவமதித்தது, கூட்டணித் தலைவர்கள், நிர்வாகிகளை அரவணைக்க தவறியது, நானே ராஜா, போட்டியாக யாரும் வந்துவிடக்கூடாது என்று செயல்பட்டு, ‘அன்டர் டீலிங்’ நடந்தது போன்ற விஷ யங்களை திமுக, அதிமுக தலைமை சேகரித்துள்ளது.

இந்தத் தகவல்கள் எல்லாம் திராவிட கட்சிகள் தலைமையின் மேஜைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுக்கு பிறகு, இவை தூசு தட்டக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

SCROLL FOR NEXT