தமிழகம்

காங்கிரஸில் ஜி.கே.மணியின் மகன்: பென்னாகரம் தொகுதியில் களமிறங்குகிறாரா தமிழ்க்குமரன்?

செய்திப்பிரிவு

பாமக ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ ஜி.கே.மணியின் மகனும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

பாமக இளைஞர் சங்கத் தலைவராக இருந்த அன்புமணி, கடந்த 2023-ல் பாமக தலைவரானார். அப்போது கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே.மணி கவுரவத் தலைவரானார். இதனால் ஜி.கே.மணி அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து அவரது மகன் தமிழ்க்குமரனுக்கு பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பு கொடுத்து மணியை சமாதானம் செய்தார் ராமதாஸ். பின்னாளில் அந்த பதவியை தமிழ்குமரன் ராஜினமா செய்தார். அதற்கு அன்புமணி தான் காரணம் எனச் சொல்லப்பட்டது.

          

இதையடுத்து, ராம​தாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்​தி​யின் மகன் முகுந்​தன் இளைஞர் சங்​கத் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டார். இதற்​கும் அன்​புமணி கடும் எதிர்ப்​புத் தெரிவித்தார். இப்படியான சூழலில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, பொதுச் செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் தமிழ்க்குமரன் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பதால் தனது தந்தை சிட்டிங் எம்எல்ஏ-வாக இருக்கும் அங்கு தமிழ்க்குமரன் போட்டியிடலாம் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

SCROLL FOR NEXT