அம்மாபேட்டை - மாதவச்சேரி சாலையில் உள்ள ரியல் எஸ்டேட் மனைப் பிரிவில் கொட்டப்பட்டுள்ள வண்டல் மண்.

 
தமிழகம்

கள்ளக்குறிச்சியில் விவசாயிகளுக்கான வண்டல் மண் அனுமதி ‘வணிக சுரண்டல்’ ஆக மாறுகிறதா?

ந.முருகவேல்

கள்ளக்குறிச்சி: இயற்கை வளங்களை பாது காக்கவும், விவசாய நிலங்களை வளப்படுத்தவும் அரசு தரும் சலுகை ரியல் எஸ்டேட் தொழில் புரிவோருக்கான வணிகச் சுரண்டலாக மாறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வண்டல் மண் தழைச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர் தேக்கும்திறன் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளதால் வேளாண்மைக்கு மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

ஆற்றுப் படுகைகளில் இந்த மண் இயற்கையாகவே புதுப்பிக்கப் படுவதால் இப்பகுதிகள் வேளாண்மையின் மையமாக விளங்குகின்றன. விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழி லாளர்கள் பயன்பெறும் வகை யில் தமிழக அரசு நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல அனு மதித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ​விவசாய நிலங்களை மேம்படுத் துவதற்காக, நீர்நிலைகளில் இலவசமாக வண்டல் மண் அள்ள அரசு அனுமதி வழங்கி யுள்ளது. ஆனால் நடைமுறையில் விவசாயிகள் பெயரில் பெறப் படும் அனுமதியை வைத்து சில இடைத்தரகர்கள் மண்ணை அள்ளி ரியல் எஸ்டேட் தொழில் செய்வோருக்கு விற்பனை செய்கின்றனர்.

விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய ஏரி வண்டல் மண், தற்போது தனியார் ரியல் எஸ்டேட் வீட்டுமனைப் பிரிவுகளுக்குப் பகிரங்கமாக கொண்டு செல்லப்படு கிறது. ஒரு லோடு வண்டல் மண் ரூ. 1,500 முதல் ரூ.2,000 வரை விற்கப்படுகிறது.

அரசு விதிகளின்படி ஒரு நாளைக்கு ஒரு விவசாயிக்கு 5 வாகனங்களில் 15 நடைகள் மட்டுமே மண் அள்ள அனுமதி உண்டு. ஆனால் இங்கு, 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை இடைவிடாது மண் அள்ளப்பட்டு, கடத்தப்பட்டு வருகிறது. இதை கண்காணிக்க வேண்டிய வருவாய் ஆய்வாளர் கண்டுகொள்வதில்லை.

பாதுகாப்பற்ற வகையில் மண் அள்ளிச் செல்லும் டிராக்டர்.

இதுதொடர்பாக இயற்கை வள பாதுகாப்பு அரண் நிர்வாகி ஆறுமுகம் கூறுகையில், “கண் முன்னே இயற்கை வளம் கொள்ளையடிக்கப்படுவதை உயர திகாரிகளுக்கு தெரிவித்தால், அவர்கள் உடனடியாக மண் அள்ள அனுமதி பெற்ற விவசா யிடம் பேசி, நம்மிடமே பேரம் பேசுகின்றனர்.

வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது? கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட வெங்கட்டாம்பேட்டை மற்றும் அம்மாபேட்டை - மாதவச்சேரி சாலை பகுதி, தற்போது மண் மாஃபியாக்களின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதேபோல் உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டை, கணையார் போன்ற கிராமங் களிலும் இதே நிலை தான்.

இப்பிரச்சினை இதோடு முடிய வில்லை. வண்டல் மண்ணை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் வீதிகளில் அதிவேகமாகச் செல்வதால் அப்பகுதி மக்கள் அச்சத்தின் பிடியில் உறைந்து போயுள்ளனர். விபத்துகள் தினசரி நிகழ்வாகிவிட்ட நிலையில் நேற்று முன்தினம் நடந்த விபத்து தொடர்பாக கச்சிராயபாளையம் காவல் துறையினர் ஒரு வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்” என்றார்.

​இதுதொடர்பாக சின்னசேலம் வட்டாட்சியர் வினோத்பாபுவிடம் பேசுகையில், “அதுதொடர்பாக விசாரித்து ஆய்வு செய்கிறேன். விற்பனை செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT