“தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை பேச்சுவார்த்தை இல்லை” - ராகுல் காந்தி திட்டவட்டம்

“தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை பேச்சுவார்த்தை இல்லை” - ராகுல் காந்தி திட்டவட்டம்
Updated on
1 min read

புதுடெல்லி: “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை பேச்சுவார்த்தையிலோ அல்லது விவாதத்திலோ எதிர்க்கட்சிகள் பங்கேற்காது,” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முன்வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்திருந்தார். எனது பெயரை குறிப்பிட்டும் அவர் அழைப்பு விடுத்தார். வழக்கமாக, ஒருவர் மற்றொருவரின் பெயரை குறிப்பிடும்போது அதற்கு பதில் அளிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், நான் பதிலளிக்க முயன்றபோது எனது மைக் அணைக்கப்பட்டது. எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். மாணவர்களுக்கு மூன்று கோரிக்கைகள் உள்ளன. 1. ஊழல் மிகுந்த கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும். 2. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 3. பிரதமர், மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவைதான் அந்த மூன்று நிபந்தனைகள். தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை நாங்கள் பேச்சுவார்த்தையிலோ அல்லது விவாதத்திலோ ஈடுபடப் போவதில்லை.” என தெரிவித்தார்.

முன்னதாக, அவை நடவடிக்கைகள் தொடர ஒத்துழைக்குமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வேண்டுகோள் விடுத்தார். மக்களவை இன்று காலை 11 மணிக்குக் கூடிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ராகுல் காந்தியை நேரில் சந்தித்த கிரண் ரிஜிஜு, அவை நடவடிக்கைகள் சுமுகமாக தொடர ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க அரசு ஒப்புக்கொண்ட போதிலும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் விவாதத்தை நடத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

எனினும், பகல் 12 மணிக்கு ஜகதாம்பிகா பால் தலைமையில் மக்களவை மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஜகதாம்பிகா பால் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அமளி தொடர்ந்ததால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.

“தர்மேந்திர பிரதான் நீக்கப்படும் வரை பேச்சுவார்த்தை இல்லை” - ராகுல் காந்தி திட்டவட்டம்
“சிஜேபி போராட்டத்துக்கு பின்னால் வெளிநாட்டு சக்திகள்” - ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in