ஜெகத்ரட்சகன் | கோப்புப்படம்
புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பதில் தொடங்கி, யாருக்கு எத்தனை தொகுதிகள்... எந்தெந்த தொகுதிகள் யார் யாருக்கு... என்பது வரையில் திமுக - காங்கிரஸ் இடையில் கடும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக, அனைத்துத் தொகுதி களிலும் கட்சியை மேலும் பலப்படுத்த உறுப்பினர்கள் சேர்ப்பு நிகழ்வை நடத்தி வருகிறது. இதற்கான பொறுப்பை கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளரான ஜெகத்ரட்சகனிடம் ஒப்படைத் துள்ளது திமுக தலைமை. இதையடுத்து, கடந்த அக்டோபரில் இருந்தே புதுச்சேரியை மையம் கொண்டிருக்கிறார் ஜெகத்.
இதைவைத்து, இம்முறை ஜெகத்தே முதல்வர் வேட்பாளராக புதுச்சேரியில் களமிறங்கலாம் என்ற பேச்சுகள் எழ ஆரம்பித்தி ருக்கின்றன. இதுபற்றி நம்மிடம் பேசிய புதுச்சேரி திமுகவினர், “புதுச்சேரி அருகேயுள்ள கலிங்கமலைதான் (விழுப்புரம் மாவட்டம்) ஜெகத்தின் சொந்த ஊர். வணிகரீதியாக அவருக்கு புதுச்சேரியுடன் நெருங்கிய தொடர்புகள் உண்டு. 2014 மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட்டு தோற்றுப் போனார் ஜெகத்.
அதனைத் தொடர்ந்து புதுச்சேரி வழியாக மாநிலங்களவைக்குச் செல்ல ஒரு முயற்சி எடுத்தார். அவரது நகர்வால் அப்போதைய முதல்வர் ரங்கசாமியின் ஆட்சிக்கே பாதிப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதா பக்கம் திரும்பிய ரங்கசாமி, தனது நண்பரான கோகுலகிருஷ்ணனை அதிமுக வேட்டி கட்ட வைத்து ராஜ்யசபா எம்பி ஆக்கினார்.
ரங்கசாமியின் இந்த அதிரடி நடவடிக்கையால் அப்போது, ஜெகத்ரட்சகன் புதுச்சேரி அரசியலுக்குள் வர முடியாமல் போனது. அதன்பிறகு, தமிழக அரசியலில் தன்னை தீவிரப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் திசைக்கொன்றாய் பிரிந்து நின்ற புதுச்சேரி திமுக கோஷ்டிகள் எல்லாம் இப்போது தேர்தலுக்காக ஒன்றுகூடி நிற்கின்றன.
லாட்டரி மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்திருப்பதால் இம்முறை புதுச்சேரி தேர்தல் களத்தில் பணம் ‘தாராளமாக’ புகுந்து விளையாடும் எனத் தெரிகிறது. அவருக்குப் போட்டியாக ’பேங்கை’ திறக்க ஜெகத் தான் சரியான ஆள் என்பதால் இம்முறை அவரை புதுச்சேரியில் களமிறக்கிப் பார்க்கலாம் என நினைக்கிறது திமுக தலைமை.
புதுச்சேரியில் என்டிஏ அணிக்கு முதல்வர் ரங்கசாமி தலைவராக இருக்கிறார். இருந்த போதும் பல்வேறு விஷயங்களில் பாஜக மீது அதிருப்தியில் இருக்கும் அவரை, எங்கள் பக்கம் வர வேண்டும் என அண்மையில் காரைக்கால் திமுக-வினர் வெளிப்படையாகவே அழைத்தனர். இதனிடையே அண்மையில் நடந்த தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் ரங்கசாமியும், ஜெகத்ரட்சகனும் சந்தித்துப் பேசியதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையெல்லாம் பார்க்கையில் திமுக தலைமை ஜெகத்தை வைத்து ’பி பிளான்’ ஒன்றையும் வைத்திருக்கும் போல் தான் தெரிகிறது” என்றனர்.
“புதுச்சேரி அரசியலுக்கு வரும் ஆசை இருக்கிறதா?” என்று ஜெகத்ரட்சகனிடம் கேட்டதற்கு, "என்னை ஒரு தூதுவனாக எங்கள் தலைவர் புதுச்சேரிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். நானும் சிவாவும் (புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர்) ஆஞ்சநேயர் மாதிரி. தலைவர் சொல்வதை நாங்கள் செய்வோம். மற்றபடி அனைத்து முடிவுகளையும் தலைவர் தான் எடுப்பார்" என்றார்.
“திமுக-வுக்கும், காங்கிரஸுக்கும் இடையில் வார்த்தைப் போர் அதிகமாக நடக்கிறதே” என்று கேட்டதற்கு, "எங்களுக்கு எங்கள் குழந்தை (திமுக) அழகு. அதேபோல் அவர்களுக்கு அவர்கள் குழந்தை (காங்கிரஸ்) அழகு. தொகுதிகள் உள்ளிட்ட மற்ற விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் எங்கள் தலைவர் சொல்வதுதான் வேதவாக்கு" என்றார். ’வெயிட்டான’ இந்த ஆஞ்சநேயரை வைத்து அறிவு ’ஆலயத்து’ ராமபிரான் என்ன திட்டம் போடுகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.