மதுரை: "கூட்டணி கட்சிகள் குரலையும் திமுக தலைமை ஏன் காதில் போடவில்லை?" என்று திண்டுக்கல் முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள விவரம் வருமாறு: தோழர்கள் நண்பர்கள் அனைவரின் வருத்தமும் வலியும் என்னையும் தாக்கியுள்ளது.. கம்பீரமாகப் போராடும் உங்கள் கரங்களைப் பற்றிக் கொள்கிறேன். வேதனையோடுதான் இதனை பதிவு செய்கிறேன். நமது கூட்டணிக்குள் அனைத்துக் கட்சிகளுக்குமான தொகுதிப்பங்கீடு செய்வதில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். அதை நாம் புரிந்து கொள்கிறோம்.
தேமுதிக, காங்கிரஸ் விசிக கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட எண்ணிக்கைக்குள்ளும் நான் வரவில்லை. ஆனால் தேமுதிக ஒரு கருத்தை முன்வைத்தார்கள். "கூட்டணியின் ஒற்றுமை கருதி ஒரு சில இடங்களை விட்டுத் தரத் தயார் என அறிவித்தார்கள். திமுக தலைமைக்கும் அது தெரியும். சிபிஎம் தரப்பில் வழங்கப்பட்ட இந்த எண்ணிக்கை சரியானதல்ல என பலமுறை கூறப்பட்டது. இந்த இரண்டு குரலையும் திமுக தலைமை ஏன் காதில் போடவில்லை? கண்டுகொள்ளவில்லை? இடதுசாரி அரசியலை திமுக பாதுகாக்கிறது என விசிக தலைவரும் குறிப்பிட்டுள்ளார். .
ஆனால் ஏன் இடதுசாரிக் கட்சிகளுக்கு மட்டும் எண்ணிக்கை குறைக்கப்பட்டது?. இப்போது மக்கள் நீதி மய்யம் முழுமையாக தங்கள் தொகுதிகளை வழங்கி விட்டார்கள். ஒவ்வொரு கட்சியும் வெளியே தனிக்கட்சிகள் என்றாலும் கூட்டணிக்குள் அங்கம் தானே.
தங்கள் வீட்டில் ஏற்பட்ட துக்கத்திற்கு கூட இத்தனை கலங்கியிருக்காத தோழர்கள் இன்றைய நாளில் அத்தனை துயரத்தோடு காணப்படுகிறார்கள். தன் வீட்டிற்கு பட்டா இருக்காது. ஆனால் ஊருக்கே பட்டா கேட்கும் போராட்டத்தில் முன்வரிசையில் நிற்பார். போராளிகள் அவர்கள். சுயநலமற்ற எந்நேரமும் மக்களுக்கான போராட்டத்தில் இறுதி மூச்சு அடங்கும் வரை தங்களுக்கென்று எதையும் சேர்த்துக்கொள்ளாத தியாகத்தோடு வாழ்பவர்கள்.
அவர்களின் வருத்தங்களை ஒரே ஒரு எண்ணிக்கை பூர்த்திசெய்து விடாது. பிரச்சினை அதுவல்ல. இடதுசாரிகளை இந்த அளவிற்கு கீழே தள்ளுவது சரியா? நியாயமா?. இடதுசாரிகளை ஒதுக்குகிறீர்களா அல்லது வேண்டாவெறுப்பாக கூட்டணிக்குள் வைத்திருக்கிறீர்களா?. இந்தக் கேள்விகளை பொதுமக்களும் கேட்கிறார்கள், நானும் கேட்கிறேன். இவ்வாறு அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.