சென்னை: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான வழக்கை முடிக்க லஞ்சமாக வாங்கிய பணத்தில், ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ரூ.24 கோடிக்கு தங்கம் வாங்கியதாக கூறப்படுவது தொடர்பாக விசாரணையை முடுக்கிவிட சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாராகி என்பவர் தாக்கல் செய்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த அக்டோபர் 1 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சிறப்பு புலனாய்வு விசாரணை அதிகாரி முன் நேரில் ஆஜராகி ஆதாரங்களையும் தகவல்களையும் தான் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
காவல் துறை ஜெம் வீரமணி மீதான வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் ரூ.147.87 கோடி மதிப்புள்ள சொத்துகள் கைமாறியுள்ளதாகவும், குறிப்பாக வழக்கை முடிப்பதற்காக வாங்கிய லஞ்சப் பணத்தில், சென்னையில் உள்ள பிரபல நகைக் கடையில் இருந்து சுமார் ரூ.24 கோடிக்கு ஐபிஎஸ் அதிகாரி அருண் தங்கம் வாங்கியதாகவும் தகவல் கிடைத்திருப்பதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பணம் பிரகாஷ் கண்ணையன் என்பவர் வழியாக கைமாறியுள்ளதும், விசாரணை தொடங்கியதும் அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாகவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லஞ்சப் பணத்தை மறைக்கவே இந்த தங்கம் வாங்கப்பட்டுள்ளதா என்பதை அறிய ரசீதுகள், வங்கிப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று வாராகி தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.