புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து வழக்கில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஊழல் தடுப்பு போலீஸார் மேலதிக விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், 2016-ல் இருந்து 2021 வரை அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் தனது மனைவி ரம்யா பெயரிலும், தனது பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் கடந்த 2021-ல் வழக்குப் பதிவு செய்தனர்.
மறுநாள் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, கல்குவாரி, அலுவலகம் உள்பட தமிழகம் முழுவதும் 56 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கு விசாரணையின்போது, விஜயபாஸ்கர், ரம்யா ஆகியோர் அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யவில்லை என விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். மேலும், விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா பெயரிலும் கடன் வாங்கப்பட்டுள்ளதால், அதுதொடர்பான ஆவணங்கள், இருவரின் வணிக நடவடிக்கைகள், வாகனங்கள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்ததற்கான ரசீதுகள் போன்ற கூடுதல் ஆவணங்களையும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் இருவர் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட அப்போதிருந்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், கூடுதல் ஆவணங்கள் அடிப்படையில் இந்த வழக்கில் மேலதிக விசாரணை செய்ய மார்ச் 13-ல் உத்தரவிட்டார். இதையடுத்து, புதுக் கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய ஆவணங்களுடன் சேர்த்து, அனைத்து ஆவணங்களையும் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஊழல் தடுப்பு போலீஸார் தரப்பில் கேட்டபோது, “நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்து அதுதொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இதற்கு நீதிமன்றம் காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யாததால், விசாரணை முழுமையாக முடிந்தவுடன் அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என்றனர்.