சென்னை: துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட குரூப்-1 பதவிகளுக்கு ஏப்ரல் 15, 16 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பி எஸ்சி செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பானோத் ம்ருகேந்தர்லால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குரூப்-1 பதவிகளின் (துணை ஆட்சியர், டிஎஸ்பி) நேரடி நியமனத்துக்கான முதன்மைத் தேர்வுகள் டிசம்பரில் நடைபெற்றன. அத்தேர்வை 1,568 பேர் எழுதினர். எழுத்துத் தேர்வு மதிப்பெண், இட ஒதுக்கீடு, காலியிடங்கள் உள்ளிட்ட விதிகளின்படி அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு 160 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஏப்ரல் 15 மற்றும் 16-ம் தேதி நடைபெறும். எனவே, தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த தேர்வு மூலமாக துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிக வரிகள் உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தொழிலாளர் நல உதவி ஆணையர் ஆகிய பதவிகளில் 78 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.