தமிழகம்

தவெகவில் ‘உள்ளடி’ அரசியல் தீவிரம்: வேட்பாளர்களை கண்டறிய விஜய் திணறல்?!

வீரமணி சுந்தரசோழன்

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை எப்படி எதிர்கொள்வது என முடிவெடுக்காமல் இன்னமும் திணறி வருகிறது தவெக. பாஜகவோடு கூட்டணிக்கு போகலாம் என ஒரு தரப்பு சொல்ல, தனித்தே நின்று சாதிக்கலாம் என இன்னொரு தரப்பு சொல்வதால், என்ன செய்வது என்று புரியாமல் தவிக்க ஆரம்பித்திருக்கிறார் விஜய் என தகவல்கள் கூறுகின்றன.

கட்சி ஆரம்பித்து, மாநாடு போட்டு, மக்கள் சந்திப்புகளை நடத்தி உற்சாகத்தோடுதான் இருந்தார் விஜய். 1977-ல் எம்ஜிஆர் பின்னால் கூட்டணிக் கட்சிகள் அணிவகுத்தது போல, தன்னோடும் பலரும் வருவார்கள் என்று நம்பினார். அதனால்தான் ‘ஆட்சியில் பங்கு தருகிறோம்’ ஆசை வார்த்தைகளை சொல்லி தூண்டிலும் போட்டு பார்த்தார் விஜய். ‘அவர் வருகிறார், கூடவே இவரும் வருகிறார்’ என்று சொல்லி விஜய்யை கனவு உலகத்தில் மிதக்கவிட்டனர் சில நிர்வாகிகள்.

சில கட்சிகள் ஆரம்பத்தில் தவெக பக்கம் தூது விட்டதால், விஜய் தரப்பு இன்னும் குதூகலமானது. ஆனால், பிரதான கட்சிகளிடம் ’பேரம்’ பேசவே தன்னை பயன்படுத்துகின்றனர் என்பதை அப்போது விஜய் அறியவில்லை. இப்போதுவரை எந்தக் கட்சியும் தவெக பக்கம் வரவில்லை. இன்னும் சசிகலாவும், ராமதாஸும் தான் எந்தக் கூட்டணிக்கும் போகாமல் பாக்கி இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் விஜய் பக்கம் போகலாம், அவ்வளவுதான்.

          

இன்னொரு பக்கம் விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணியில் கொண்டுவர கடுமையாக பாஜக முயற்சித்து வருகிறது. 40 தொகுதிகள், துணை முதல்வர் பதவி வரை விஜய்க்கு கொடுக்க என்டிஏ தரப்பு தயாராக உள்ளது. இதனை ஏற்கலாம் என ஒரு தரப்பும், வேண்டாம் என மற்றொரு தரப்பும் மல்லுக்கட்டி வருகிறார்.

வேட்பாளர் தேர்வில் திணறும் தவெக:

ஒரு தேர்தலை சந்திப்பதற்கு உள்ளாகவே தவெகவில் பல அதிகார மையங்கள் முளைத்துள்ளன. ஜான் ஆரோக்கியராஜ், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கொட்டையன் என ஆளுக்கொரு பக்கம் விஜய்யை உலுப்பி வருகிறார்கள்.

இவர்கள் தரப்பில் ஆளுக்கொரு வேட்பாளர் பட்டியலையும் விஜய்யிடம் நீட்டியுள்ளனர். இதில், ஒருவர் சொல்லும் வேட்பாளரைப் பற்றி, இன்னொரு நிர்வாகி விஜய்யிடம் ‘எக்கச்சக்கமாக’ போட்டுக் கொடுக்கிறாராம். இவர்களில் யார் சொல்வதுதான் உண்மை, யாருக்கு தொகுதியில் செல்வாக்கு உள்ளது என கள நிலவரம் தெரியாமல் குழம்பித் தவிக்கிறாராம் விஜய்.

இதுமட்டுமின்றி, விஜய்க்கு நெருக்கமான சில முக்கிய புள்ளிகள், ‘சீட்’ கேட்பவர்களிடம் ‘3 சி’ வரை வசூல் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால், விஜய் ரசிகர் மன்ற காலத்திலிருந்து உழைத்த பலரும் ‘அந்த தொகை’யை கொடுக்க வழியின்றி விக்கித்து நிற்கின்றனர்.

தற்போது புதிதாக கட்சிக்கு வந்த பலரும், ‘கரன்சி’யை கைமாற்றி சீட்டை உறுதி செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதில் தொகுதிக்கே அறிமுகமில்லாத பலரும் சீட்டை உறுதி செய்துள்ளதால், நிர்வாகிகள் விரக்தியில் உள்ளதாகவும் தகவல் பரவுகிறது.

இன்னொரு பக்கம் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்களுக்காக பணத்தை கட்டி 5 தொகுதிகள், 10 தொகுதிகள் என புக் செய்வதாக புகார்கள் பறக்கிறது. அப்படி இப்படி எனப் பார்த்தாலும் சுமார் 150 தொகுதிகளுக்கு மட்டுமே ‘வொர்த்’தான வேட்பாளர்கள் சிக்கியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது. மற்ற தொகுதிகளை கடைசி நேரத்தில் வரும் கூட்டணி கட்சிகளிடம் தள்ளிவிட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு இன்னமும் காத்திருக்கிறது தவெக.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் தேர்விலும், கூட்டணி விவகாரத்திலும் இன்னமும் சிக்கல் நீடிக்க சில நிர்வாகிகள்தான் காரணம் என சொல்லப்படுகிறது. எந்த விஷயத்திலும் விஜய் ஒரு முடிவுக்கு வரும் நேரத்தில், முக்கிய நிர்வாகிகள் சிலர் புகுந்து தங்களுக்கு சாதகமாக அவரை குழப்பி விட்டு விடுவதாகவும் மேலிடத்தில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

வேட்புமனுத் தாக்கல் தொடங்க இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில், வேட்பாளர்களையே இன்னும் முடிவு செய்யவில்லை என்றால், எப்போது பிரச்சாரத்துக்கு போவது, எப்போது மக்களை சந்திப்பது என்று நிர்வாகிகள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

விஜய்யின் முகம்தான் எங்கள் ‘பிராண்ட்’, அது மட்டுமே போதும் என மலைபோல தவெக நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த ‘பிராண்ட்’ மட்டுமே வெற்றிக்கனியை பெற்றுத் தருமா என்று நிர்வாகிகளே கேள்வி எழுப்ப ஆரம்ப ஆரம்பித்துவிட்டனர்.

SCROLL FOR NEXT