சென்னை: பாமகவின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக் கோரியும், பாமக-வின் தலைவராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அன்புமணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், ராமதாஸ் தொடர்ந்துள்ள வழக்கில் பாமகவின் பொதுச் செயலாளரான தன்னையும் எதிர்மனுதாரராக இணைக்கக் கோரி வடிவேல் ராவணன் தாக்கல் செய்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வடிவேல் ராவணன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், பாமகவின் பொதுச் செயலாளரான தன்னை இந்த வழக்கில் சேர்க்காமல் உரிமையியல் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்வது என்பது சரியான நடைமுறை அல்ல. எனவே, உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, பாமக பெயர், கொடி, சி்ன்னம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும், இந்த மனுவுக்கு ராமதாஸ் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டும் விசாரணையை ஏப்.10-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.