விமலா
சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் விமலா பணி இடைநீக்கம் செய்யப்பட்டது உள்நோக்கம் கொண்டது என்று கருத்து தெரிவித்து, அதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல் துறையின் லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அலுவலகம் சென்னை ஆலந்தூரில் உள்ளது. இங்கு ஆய்வாளராகப் பணியாற்றியவர் விமலா. இவர் கடந்த 17-ம் தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை பெருநகரக் காவல் துறையில் பாலியல் தடுப்பு பிரிவுகாவல் ஆய்வாளராக பணியாற்றிய ராஜலட்சுமி மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தேன் என்ற காரணத்துக்காக, லஞ்சஒழிப்புத் துறை அதிகாரிகள் உள்நோக்கத்துடன் தன்னை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் விமலா மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.அய்யாத்துரையும், எதிர்மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் வி.சிவலிங்கமும் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆஷா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்ததில், காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் கடந்த ஜன.6-ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மனுதாரர் விமலா, சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு எதிராக வரைவு எஃப்ஐஆர் தயாரித்து, இயக்குநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார். அதில் லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி. சில திருத்தங்களை செய்து ஒப்புதல் அளித்த பிறகே மனுதாரர் அந்த எஃப்ஐஆரை கடந்த பிப்.12-ம் தேதி பதிவு செய்துள்ளார்.
ஆனால், சக காவல் ஆய்வாளர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தார் என்ற காரணத்துக்காக மனுதாரரை இடைநீக்கம் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது. எனவே, அவரது இடைநீக்கத்துக்கு ஜூலை 9-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதிக்கிறேன். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.