தமிழகம்

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை

விசாரணையை ஏப்.8-க்கு தள்ளிவைத்த இரு நீதிபதிகள் அமர்வு

செய்திப்பிரிவு

மதுரை: ​​திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கு தொடர்பான நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கு​களில் தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வு​களுக்கு ஏப்​.8-ம் தேதிவரை இடைக்​கால தடை விதித்து உயர் நீதி​மன்ற அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

திருப்பரங்குன்றம் தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என்ற தனி நீதிபதியின் உத்​தரவை எதிர்த்​தும், நீதி​மன்ற அவம​திப்பு மனுக்​களில் தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக​வும் அரசுத் தரப்​பில் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

          

இதனை விசா​ரித்த இரு நீதிப​தி​கள் கொண்ட அமர்​வு, ஒவ்​வோர் ஆண்​டும் கார்த்​திகை தீப நாளில் தீபத்​தூணில் கோயில் நிர்​வாகம் தீபம் ஏற்ற வேண்​டும் என ஜன.6-ம் தேதி உத்​தர​விட்​டது. நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு எதி​ரான மேல்​முறை​யீடு மனுக்​கள் நிலு​வை​யில் இருந்​தன.

இதனால் நீதி​மன்ற அவம​திப்பு மனுக்​களை தனி நீதிபதி தொடர்ந்து விசா​ரணை நடத்தி பல்​வேறு உத்​தர​வு​களை பிறப்​பித்து வந்​தார். இந்த மனு கடந்த மார்ச் 4-ம் தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, உயர் நீதி​மன்​றம் நியமிக்​கும் 5 பேர் கொண்ட குழு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் வழி​பாடு நடத்த அனு​ம​திப்​பது தொடர்​பாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்​டும்.

மேலும் இதுதொடர்​பாக மார்ச் 18-ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணை​யர் இனிகோ திவ்​யன் ஆகியோர் தகுந்த பதில் அளிக்​க வேண்டும். தவறினால் அவர்​கள் மீது குற்​றச்​சாட்டு பதிவு செய்​யப்​படும் என உத்​தர​விட்டு அடுத்தகட்ட விசா​ரணையை தள்​ளி​வைத்​திருந்​தார்.

இந்த வழக்கு தனி நீதிபதி முன்பு இன்று (மார்ச் 18) விசா​ரணைக்கு வரவுள்ள நிலை​யில் நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கு​களில் தனி நீதிபதியின் உத்​தர​வுக்கு எதி​ரான மேல்​முறை​யீடு மனுக்​கள் தாக்கல் செய்யப்பட்டு நீதிபதிகள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தன.

அப்​போது அரசுத் தரப்​பில், நீதி​மன்​றம் பரிந்​துரைக்​கும் 5 பேரை தீபத்​தூண் அருகே பூஜை செய்ய அனு​ம​திப்​பது தொடர்​பாக தெரிவிக்​கக் கூறப்​பட்​டுள்​ளது. இந்த அவம​திப்பு வழக்​கில் புதிய நபர்​களும் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

இது உச்ச நீதி​மன்ற உத்​தர​வுக்கு எதி​ரானது. இதற்கு எதி​ராக​வும் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. அதை​யும் விசா​ரிக்க வேண்​டும் எனக் கோரப்​பட்​டது.

அப்​போது நீதிபதிகள், அதை அனு​ம​திப்​ப​தில் என்ன சிக்​கல் இருக்​கப் போகிறது, 5 நபர்​களை பூஜை செய்ய அனுப்​புவது பிரச்​சினை​யாக இருந்​தால் கோயில் சார்​பில் பூஜை செய்​ய​லாமே, இது சிறிய விஷ​யம்தானே. இதை செய்து மற்ற பிரச்​சினை​களை தவிர்க்​கலாமே என்​றனர்.

அதற்கு அரசு தரப்​பில், நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் 2 உத்​தர​வு​கள் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளன. அதி​காரத்தை மீறி உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது எனத் தெரிவிக்கப்​பட்​டது.

பின்​னர் நீதிபதிகள், நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கின் உத்​தர​வு​விவரங்களை அரசுத் தரப்​பில் தாக்​கல் செய்ய வேண்​டும். அது​வரை நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கு​களில் தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வு​களுக்கு இடைக்​கால தடை விதிக்​கப்​படு​கிறது. விசா​ரணை ஏப்.8-க்கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது என உத்​தரவிட்​டனர்​.

SCROLL FOR NEXT