கோப்புப் படம்
சென்னை: ஆப்பிரிக்க நாடுகளில் எபோலோ வைரஸ் பாதிப்பு இருப்பதால், சென்னை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்பிரிக்கா நாடுகளான உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், எபோலோ வைரஸ் பரவி வருகிறது. அந்த வைரஸ் மற்ற நாடுகளுக்குப் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை, அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்புகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது.
ஆலோசனைக் கூட்டம்: அதன்படி, சென்னை விமான நிலையத்தில் எபோலோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது எபோலோ பாதிப்பு அதிகமுள்ள ஆப்பிரிக்க நாடுகளாக காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் நாடுகளில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவைகள் இல்லாவிட்டாலும், இணைப்பு விமானங்களில் வரும் பயணிகளை தீவிரமாகக் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அத்தகைய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமானத்தில் சுய அறிவிப்பு படிவங்களை வழங்க வேண்டும். சென்னை விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன்பாக அந்தப் படிவங்களை முழுமையாக நிரப்பி, விமான பணிப்பெண்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதேபோல், எபோலோ நோய் அறிகுறிகள், தடுக்க வேண்டிய அவசியம் குறித்து பயணிகளுக்கு விமானங்களில் அறிவிப்புகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமானப் பயணிகள் யாருக்காவது காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு இருந்தால், அதை உடனடியாக விமான ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும். விமானங்களில் இருந்து இறங்கி குடியுரிமை சோதனை பிரிவுகளுக்கு செல்லும் வழிகளில், பயணிகளின் உடல் வெப்பநிலை, உடல் நிலையைக் கண்காணிப்பதற்கு ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்டுள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பொருத்தப்பட வேண்டும்.
அந்தக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம், பயணிகளின் உடல் நிலை, வெப்பநிலை போன்றவற்றைக் கண்காணித்து, உடல்நலம் பாதிப்பு சோர்வுடன் வரும் பயணிகளை நிறுத்தி, தனிமைப்படுத்தி, அவர்களை விசாரிக்க வேண்டும். அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளோடு தொடர்புடைய நாடுகளுக்கு சென்று வருகிறார்களா என்பதையும் கண்டறிய வேண்டும்.
அதில் சந்தேகத்துக்கு இடமான பயணிகளை உடனடியாகத் தனிமைப்படுத்தி, அதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்கள் மூலம் அவர்களை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று, தனி வார்டுகளில் 21 நாட்கள் தீவிர கண்காணிப்புகளில் வைக்க வேண்டும். மேலும், விமான நிலையங்கள், விமானங்களில் போதிய அளவில் முகக்கவசங்கள், கையுறைகள், பாதுகாப்பு உபகரணங்கள், சானிடைசர்களை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருமல், சளி, காய்ச்சல் இருக்கும் விமான பயணிகள், விமான நிலையத்தில் உள்ள பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.