தமிழகம்

போதைப்பொருள் ஒழிப்பு தீவிரம்: 1,100 போதை மாத்திரைகள், 5 கிலோ கஞ்சா பறிமுதல்

செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் எல்லையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க போலீஸார் மேற்கொண்ட தனித்தனி நடவடிக்கைகளில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 1,100 டேபென்டடால் (Tapentadol) போதை மாத்திரைகள், 5 கிலோ கஞ்சா, ரூ.60 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்துக்கு மருத்துவமனை பெயரில் சந்தேகத்துக்கிடமாக வந்திருந்த பார்சல் குறித்து கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பார்சலைப் பெற வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தைச் சேர்ந்த லீ என்பவரை கைது செய்து சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட 1,100 டேபென்டடால் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

மற்றொரு சம்பவத்தில், சிங்கப்பெருமாள் கோயில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், காசிமேடு காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான செந்தில் (எ) தாடி செந்தில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா, ரூ.60 ஆயிரம் ரொக்கம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.

நீதிமன்றக் காவல்

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போதைப்பொருள் மற்றும் மனநிலை மாற்றும் பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் இருவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தாம்பரத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை ஒழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT