சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத் திட்ட வழித்தடங்களில் அமைந்துள்ள நிலையங்களுடன், அருகிலுள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி, மருத்துவ வளாகங்களை நேரடியாக இணைக்கும் புதிய திட்டத்துக்குச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான விருப்பமுள்ள நிறுவனங்களுக்குச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 128 நிலையங்களுடன் அமைக்கப்படுகிறது. இத்திட்டம் 3 வழித்தடங்களில் (மாதவரம் – சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி, மாதவரம் – சோழிங்கநல்லூர்) செயல்படுத்தப்படுகிறது. இந்த 3 வழித்தடங்களில் இடம்பெறும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து அருகில் உள்ள பெருநிறுவன அலுவலகங்கள், பல்நோக்குப் பயன்பாட்டு வளாகங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி இணைப்பு வசதியை ஏற்படுத்தும் புதிய முயற்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இம்முயற்சியின் கீழ், மெட்ரோ ரயில் நிலையங்களையும் அவற்றை ஒட்டியுள்ள தனியார் நிறுவனங்களின் வளாகங்களையும் இணைக்கும் வகையில், பிரத்யேக நடைமேம்பாலங்கள் மற்றும் உயர்மட்ட நடைபாதைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகள் மெட்ரோ நிலையத்தில் இருந்து தடையின்றி எளிதாகத் தங்கள் இடங்களுக்குச் சென்று வரும் வகையில் முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த இணைப்புப் பாலங்களை அமைப்பதற்கான முழு மூலதனச் செலவையும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும்.
கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அதன் தூய்மைப் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு வசதிகளைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும். பொதுவாக மெட்ரோ நிலையத்தின் கட்டணம் செலுத்தாத பகுதிக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்படும். கட்டணம் செலுத்தும் பகுதிக்கு இணைப்பு தேவைப்பட்டால், அதற்கான கூடுதல் செலவையும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும்.
தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் மற்றும் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு உட்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். இதற்கான விரிவான விருப்ப வெளிப்பாட்டு ஆவணம் விரைவில் வெளியிடப்படும். இத்தகவலை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.