சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத் (72) நேற்று காலமானார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி வகித்துள்ள இனியன் சம்பத், பெரியாரின் கொள்கைகளில் பற்று கொண்டிருந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். இவரது மனைவி டெய்சி ராணி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இனியன் சம்பத் உடலுக்கு திக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நேற்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், “இனியன் சம்பத் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.