

சென்னை: தமிழ்-பிராமி, வட்டெழுத்து, கிரந்த எழுத்துருக்களின் தோற்றம், வளர்ச்சி, அவற்றை எழுதுதல், வாசித்தல், அந்த காலகட்டத்தில் பின்பற்றப்பட்ட மதங்கள், அரசியல் சூழல் உள்ளிட்டவற்றை அறிய விருப்பமா? ‘தி ஹிந்து லிட் ஃபார் லைஃப்’ (The Hindu Lit For Life 2026 ) நிகழ்வின் ஒரு பகுதியாக ‘தமிழ் பிராமி, வட்டெழுத்துகளை மையப்படுத்தும் தொடக்ககால கல்வெட்டியல்’ பயிலரங்கு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையில் மூத்த கல்வெட்டியலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற டாக்டர் வி.வேதாசலம், அவ்வெழுத்துகளின் பரிணாமம், வளர்ச்சி குறித்து விளக்கம் அளிக்கிறார். தமிழ் - பிராமி எழுத்து, தமிழகத்தில் சமணம், யட்சி வழிபாடு உட்பட 30-க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார்.
கீழடி, அழகன்குளம், கோவலன்பொட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் பங்கேற்றுள்ள டாக்டர் வி.வேதாசலம், தனது அனுபவச் சான்றுகளுடன் தொடக்ககாலக் கல்வெட்டியலின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.
இந்தப் பயிலரங்கு சென்னைலேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள `தி ஹிந்து ஸ்டுடியோ'வில் வரும் 17, 18-ம் தேதிகளில் காலை 10.30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் 20 வயதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்கலாம்.
மொத்தம் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால், https://www.thehindu.com/lit-for-life/workshop/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இத்துடன் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தும் பதிவு செய்து கொள்ளலாம்.