கோவை: “யார் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தாலும், அவர்களை கட்சியில் இணைத்துக் கொள்வது என்பது தவெகவின் நம்பகத்தன்மை பாதிக்க செய்யும். எனவே தவெக தலைமை இதற்கு ஊக்கமளிக்க கூடாது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறும்போது, “குன்னத்தில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது, வேதனையளிக்கிறது. சமூக ஊடகங்களில் வரும் அவதூறுகளுக்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம் என விசிகவினரை கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை கேள்விபட்டு, அதனை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன்.
மாவட்ட முன்னணி பொறுப்பாளர்கள், ஆர்ப்பாட்டம் இல்லை என்பதை அறிந்து தவிர்த்துவிட்டார்கள். ஆனால், தகவல் தெரியாதவர்கள் அங்கே கூடியிருக்கிறார்கள். திமுகவை சார்ந்தவர்களும் அங்கே கூடியுள்ளார்கள். இதனால் அங்கே விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன. இனி அவ்வாறு நடக்க இயக்க தோழர்கள் இடம் கொடுக்க கூடாது.
அதிமுக எம்எல்ஏக்கள் விலகி தவெகவில் இணைவதை ஆரோக்கியமான அரசியலாக கருதவில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சி வரக் கூடாது என எங்கள் ஆதரவை வழங்கினோம். தவெகவின் அழைப்பை ஏற்று அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளோம். எந்த சூழலிலும் உங்கள் ஆட்சி கவிழ இடம் கொடுக்க மாட்டோம். அந்த நம்பிக்கையோடு நீங்கள் ஆட்சியை திறம்பட செய்யவேண்டும். இதுபோன்ற விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காத வகையில் தவெக தலைமை செயல்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
அதிமுக இதுபோன்ற நெருக்கடியை சந்திக்கும் என தேர்தலுக்கு முன்பே சொல்லியிருந்தேன். பாஜக கூட்டணியில் இருந்ததால் தான் அதிமுக ஆதரவை பெறுவதில் தவெகவுக்கு நெருடல் இருந்ததாக அக்கட்சி தலைவர்கள் கூறியிருந்தனர். பாஜக கூட்டணி இல்லாமல் அதிமுக இருந்திருந்தால், தவெக அவர்களின் ஆதரவை நாடியிருக்கும். எனவேதான் அதிமுக இந்த நெருக்கடி நிலையை சந்திக்கிறது. யார் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தாலும், அவர்களை கட்சியில் இணைத்துக்கொள்வது என்பது தவெகவின் நம்பகத்தன்மை பாதிக்க செய்யும். எனவே தவெக தலைமை இதற்கு ஊக்கமளிக்க கூடாது. தமிழக அரசியலில் தலித்களுக்கு அதிகம் இடம் கொடுத்திருப்பது இதுவே முதன் முறை. அந்த சமூகத்துக்கு அங்கீகாரம் அளித்திருப்பது மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.