சென்னை: இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லாக, உள்நாட்டு தனியார் நிறுவனத்தால் முழுமையாக வடிவமைக்கப்பட்ட முதல் ஆர்பிட்டல் வகை ராக்கெட்டான ‘விக்ரம்-1’ இன்று (ஜூலை 18) விண்ணில் ஏவப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11:30 மணிக்கு இந்த வரலாற்று சிறப்புமிக்க சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிக்கட்ட தயாரிப்புகள் நிறைவடைந்து, தரைக் கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்பு சோதனைகள் மற்றும் ரேடார் கண்காணிப்பு சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, ஏவுதளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான 36 மணி நேர கவுண்டன் நேற்று முன்தினம் தொடங்கியது.
‘மிஷன் ஆகமன்’
‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ராக்கெட்டின் பயணத்துக்கு ‘மிஷன் ஆகமன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனம், தான் சொந்தமாக உருவாக்கிய ஏவுதளத்தை பயன்படுத்தி செயற்கைக்கோளை விண்வெளி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த முயற்சிப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த பயணத்தின் நோக்கம் ஒர் செயற்கைக்கோளை மட்டும் விண்ணில் செலுத்துவது அல்ல. மாறாக, ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் விண்வெளி பயணத்தின் போது எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நேரடியாக மதிப்பீடு செய்வதற்கான தரவுகளை சேகரிப்பதே இந்த சோதனையின் பிரதான இலக்காகும்.
350 கிலோ வரை எடையிலான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான செயற்கைக்கோள்களை 450 கிமீ தூரத்தில் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.