தமிழகம்

இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு சர்வதேச அளவில் முன்மாதிரியாக இருக்கும்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

செய்திப்பிரிவு

மதுரை: இந்​தி​யா​வின் டிஜிட்​டல் பொது உள்​கட்​டமைப்பு சர்​வ​தேச அளவில் முன்​மா​திரி​யாக மாறி​யுள்​ளது என்று மத்​திய நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பேசி​னார்.

இந்​திய தொழில்​துறை கூட்​டமைப்​பின் முக்​கிய பிரி​வான ‘யங் இந்​தி​யன்​ஸ்’ அமைப்பு சார்​பில் மதுரை​யில் தேசிய நிதி தொழில்​முனை​வோர் 2 நாள் உச்சி மாநாடு ‘எல்​லைகளைத் தாண்​டிய தொழில்​முனை​வு’ என்ற தலைப்​பில் நேற்று முன்​தினம் தொடங்​கியது.

நிறைவு நாளான நேற்று நடந்த அமர்​வுக்கு யங் இந்​தி​யன்ஸ் அமைப்​பின் தேசி​யத் தலை​வர் அருண் ரத்​தோட் தலைமை வகித்​தார். சிஐஐ தென் மண்​டலத் தலை​வர் பி.ர​விச்​சந்​திரன் முன்​னிலை வகித்​தார். சிஐஐ டைரக்​டர் ஜெனரல் சந்​திரஜித் பானர்ஜி வரவேற்​றார்.

இம்​மா​நாட்​டில், மத்​திய நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பேசி​ய​தாவது: மதுரை 2,500 ஆண்​டு​கள் தொன்​மை​யான நகரம். இந்​நகரம் தொழில், வணி​கத்​துக்​காக தொடர்ந்து இயங்​கிய​தால்தான் தூங்​கா நகரம் என்று அழைத்​துள்​ளனர். மதுரை​யின் வரலாற்றை கூறும் கங்​காதே​வி​யின் புகழ்​பெற்ற ‘மதுரா விஜ​யம்’ நூலில் மதுரை எதிர்​கொண்ட படையெடுப்​பு​கள், அழி​வு​கள் ஆகிய​வற்​றி​லிருந்து எப்​படி வீரி​யத்​துடன் மீண்​டெழுந்​தது என்​பது ஆவணப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

தற்​போதைய தொழில்​நுட்ப வளர்ச்​சி​யால் உள்​ளங்​கை​யில் உலகம் சாத்​தி​ய​மாகி​யுள்​ளது. தற்​போதைய இளம் தொழில்​முனை​வோர் தடைகளை கடந்து முயற்​சி​யால் முன்​னேற முடி​யும். பின்​தங்​கிய மாவட்​டங்​களை மேம்​படுத்​தும் லட்​சிய மாவட்​டங்​கள் திட்​டம் விருதுநகர், ராம​நாத​புரத்​தில் செயல்​படுத்​தப்​படு​கிறது. விருதுநகரில் மிள​காய் வத்தல் வணி​கத்தை உலகளா​விய சந்​தைக்கு கொண்டு செல்​லும் வகை​யில் நிறு​வனத்தை தொடங்​க​வுள்​ளோம். மேலும் விவ​சா​யிகள் மாப்​பிள்ளை சம்பா, கருப்பு கவுனி போன்ற பாரம்​பரிய நெல் ரகங்​களை மீட்டு உலக நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்ய தொடங்​கி​யுள்ளனர்.

ரஷ்​யா- உக்​ரைன் போர், இஸ்​ரேல்- ஈரான் இடையே பதற்​றம், சரக்​குக் கப்​பல்​கள் சரி​யான நேரத்​தில் வராதது, எண்​ணெய் மற்​றும் எரி​வாயு சிக்​கல்​கள், உரங்​களின் விலை உயர்வு போன்ற பல்​வேறு சவால்​களுக்கு மத்​தி​யிலும் இந்​தியா மிக வேக​மாக வளர்ந்து வரும் பொருளா​தார நாடாக உள்ளது. இந்​தி​யா​வின் டிஜிட்​டல் பொது உள்​கட்டமைப்பு சர்​வ​தேச அளவில் ஒரு முன்மா​திரி​யாக மாறி​யுள்​ளது. யுபிஐ தளத்​தில் மாதம் 20 பில்லியனுக்​கும் அதி​க​மான பரிவர்த்தனை​கள் நடக்​கின்றன. இந்​தி​யா​வில் தற்​போது 2,100 உலகளா​விய திறன் மையங்​கள் உள்​ளன.

அவசர கால கடன் உத்​தர​வாதத் திட்​டம் மூலம் குறு, சிறு மற்​றும் நடுத்​தரத் தொழில் நிறு​வனங்​களுக்கு அரசு தொடர் ஆதரவை வழங்கி வரு​கிறது. இந்த வாய்ப்​பு​களை புதிய தொழில்​முனை​வோர் பயன்​படுத்​திக்​கொள்ள வேண்​டும். தற்​போது இந்​தியா உலக அரங்​கில் தவிர்க்க முடி​யாத ஒரு சக்​தி​யாகஉயர்ந்​துள்​ளது. பிரான்​சில் நடை​பெறும் சர்​வ​தேச ‘ஐடிஇஆர்’ எனும் அணுக்​கரு இணைவு ஆராய்ச்சி திட்​டத்​தில் இந்​தியா முக்​கிய பங்கு வகிக்​கிறது.

ஆர்க்​டிக் மற்​றும் அண்​டார்​டிகா துரு​வப் பகு​தி​களி​லும் இந்​தியா ஆராய்ச்​சிகளை மேற்​கொண்டு வரு​கிறது. நில​வின் தென்​துரு​வத்​தில் ஆராய்ச்​சிமேற்​கொண்​டதன் மூலம் இந் தியா முத்​திரை பதித்துள்​ளது. தைரியமாகவும், பொறுப்​புட​னும் புதிய தொழில்​களை உரு​வாக்​குங்​கள். 2047-க்​குள் வளர்ந்த இந்​தியா என்​னும் இலக்கை நோக்கி ஒன்​றிணைந்து பயணிப்​போம். இவ்​வாறு பேசி​னார்.

இந்த மாநாட்​டில் நாடு முழு​வது​மிருந்து 71 ‘யங் இந்​தி​யன்​ஸ்’ கிளை​களைச் சேர்ந்த 600-க்​கும் மேற்​பட்ட தொழில்​முனை​வோர், முதலீட்​டாளர்​கள், தொழில் வல்​லுநர்​கள் பங்கேற்றனர். யங் இந்​தியன்ஸ் நிர்வாகி அனுஜ்அகர்​வால் நன்றி கூறி​னார்.

SCROLL FOR NEXT