புதுடெல்லி: இந்தியா–நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பொருட்கள் மற்றும் சேவைகளின் இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதுடன், முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த ஏப். 27-ம் தேதி தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இரு நாடுகளும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளும் தேதியில் அடுத்த மாதம் இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் என்று வர்த்தகத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் 100% பொருட்களுக்கும் வரியில்லா சந்தை அணுகல் கிடைக்கும்.
இதற்கு முன்பு, மட்பாண்டப் பொருட்கள், தரைவிரிப்புகள், வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுக்கு நியூசிலாந்து 10% வரை இறக்குமதி வரி விதித்து வந்தது. மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்ய நியூசிலாந்து உறுதியளித்துள்ளது.
இந்தியா–சிலி தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: இதற்கிடையே, இந்தியா–சிலி இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகளும் சுமுகமாக முன்னேறி வருவதால், அடுத்த மாதத்துக்குள் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.