

புதுடெல்லி: போட்டி நாடுகளை விட இந்தியாவுக்குச் சாதகமான சலுகைகளை அமெரிக்கா வழங்கும்பட்சத்தில் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று தெரிவித்தார்.
மத்திய வர்த்தக அமைச்சகம் சார்பில் டெல்லியில் நடத்தப்பட்ட தேசியப் பயிலரங்கில் அவர் பேசியதாவது: சுமார் 60 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட பொருளாதாரங்களை உள்ளடக்கிய 9 தாராள வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா ஏற்கெனவே மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு சந்தைகளை இந்தியாவால் அணுக முடியும்.
அடுத்து வரும் மாதங்கள் மற்றும் சில ஆண்டுகளில் கனடா, மெக்சிகோ, சிலி, மெர்கோசுர், தென்னாப்பிரிக்க சுங்க யூனியன், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படவுள்ளன. மேலும், ஆசியான், கொரியா மற்றும் ஜப்பான் உடனான வர்த்தக ஒப்பந்தங்களும் மறுஆய்வு செய்யப்படவுள்ளன. இதன் மூலம் உலக வர்த்தகத்தில் 75% பங்கை போட்டி நாடுகளை விடக் குறைந்த வரிக் கட்டணத்தில் இந்தியா பெற முடியும்.
பிரிட்டன், மொரீஷியஸ், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா ஏற்கெனவே அமல்படுத்தியுள்ளது. நியூசிலாந்து உடனுடனான ஒப்பந்தம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. அதைத் தொடர்ந்து, 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனுடனான ஒப்பந்தமும் அமலாகும். போட்டி நாடுகளை விட இந்தியாவுக்குக் குறைந்தபட்ச சலுகைக் கட்டணத்தை அமெரிக்கா வழங்கும் பட்சத்தில், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.