சென்னை: இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட 20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது.
தமிழக அரசின் டிட்கோ நிறுவனம், இங்கிலாந்து நாட்டின் தேசிய இந்திய மாணவர் மற்றும் பழைய மாணவர் சங்கம், கிழக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாட்டை சென்னையில் 2 நாட்கள் நடத்துகின்றன.
கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டை தென்சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று தொடங்கிவைத்து பேசியதாவது: சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் அடிப்படை கல்வி.
அதிகார அமைப்பை நோக்கி கேள்வி எழுப்பும் தைரியத்தை தரக்கூடிய சாதனம் கல்விதான். பழங்காலம் தொட்டே அறிவியல் சிந்தனையையும், பகுத்தறிவையும், கேள்வி கேட்பதையும் நாம் வலியுறுத்தி வருகிறோம்.
முதல்வரின் காலை உணவு திட்டத்தை கனடா உள்பட பல்வேறு நாடுகள் பின்பற்றத் தொடங்கியுள்ளன. பள்ளிக் கல்வியும், உயர்கல்வியும் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவின் மக்கள்தொகையில் 6 சதவீதத்தைக் கொண்டுள்ள தமிழகம், நாட்டின் ஜிடிபி-க்கு 9 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. கல்விதான் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் இணைப்பு சக்தி. இவ்வாறு அவர் பேசினார் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற ‘இந்து’ என்.ராம் பேசும்போது, “அதிகாரம் பெறுவதற்கான சக்திவாய்ந்த சாதனம் கல்வி.
காலம்காலமாக கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு கல்வி அளிப்பது என்பது ஒரு சவாலான விஷயம். அந்தப் பணியை செய்தது திராவிட இயக்கம். கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டதால்தான் தமிழகம் இன்றைய தினம் கல்வியில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
இந்தியாவில் உள்ள பெண் தொழில்முனை வோர்களில் 43 சதவீதம் பேர் தமிழகப் பெண்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல’’ என்றார். உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், டிட்கோ தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா, ஆஸ்திரியா நாட்டின் வியன்னா பல்கலைக்கழக வேந்தர் ஹெல்மெட் கேர்ன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். டிட்கோ நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி நன்றி கூறினார்.
முதல்வர் இன்று பங்கேற்பு: இம்மாநாட்டில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட 20 நாடுகளைச் சேர்ந்த 400 பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், தொழில் துறையினர் என 1000 பேர் பங்கேற்றுள்ளனர்.
வெளிநாட்டு பல்கலை.களின் அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. இன்று (வியாழன்) நடைபெறும் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பேசுகின்றனர்.