புதுச்சேரி: புதுச்சேரி தேர்தலில் காங்கிரஸூக்கு 16 தொகுதிகள், திமுக.வுக்கு 14 தொகுதிகள் என்று முடிவானது. இதில் உள்ஒதுக்கீடாக இந்திய கம்யூனிஸ்ட், விசிகவுக்கு தலா ஒரு தொகுதியை திமுக வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், திமுக, விசிக, கம்யூனிஸ்ட்கள் போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து திமுக – காங்கிரஸ் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் மனுக்களை திரும்பப் பெற காலக் கெடு நேற்று முடிந்தது.
தற்போது காலாப்பட்டு, ராஜ்பவன், மங்கலம், திருபுவனை, காரைக்கால் தெற்கு ஆகிய 5 தொகுதிகளில் திமுக- காங்கிரஸ் கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. அதேபோல் உழவர்கரை, ஊசுடு, நெட்டப்பாக்கம், ஏனாமில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடுகிறது.
இதற்கு மத்தியில் தட்டாஞ்சாவடி, உழவர்கரை ஆகிய இரு தொகுதிகளில் மனு தாக்கல் செய்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் தட்டாஞ்சாவடியில் மட்டும் வாபஸ் பெற்றுள்ளது. உழவர்கரையில் போட்டியிடுகிறது. இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலர் சலீம் கூறுகையில், "இத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு புதுச்சேரியில் எங்களின் ஆதரவு இல்லை. விசிக, மார்க்சிஸ்ட், மதிமுக கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் ஆதரவு அளிப்போம். நல்ல சுயேச்சைகளுக்கும் ஆதரவு தருவோம். வலுவான இண்டியா கூட்டணியை காங்கிரஸ் உடைத்து விட்டது’’ என்றார்.
இதே போல் கூட்டணிக் குழப்பத்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லாஸ்பேட்டை, திருபுவனை ஆகிய இரு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதுச்சேரி மாநில செயலாளர் ராமசந்திரன் கூறுகையில், “கூட்டணிக் கட்சிகளை இணைத்துச் செல்ல திமுக - காங்கிரஸ் இரண்டுமே தவறி விட்டன. இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதியில் ஆதரித்து பிரச்சாரம் செய்வோம். விசிக, மதிமுக, தேமுதிக கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.