சென்னை: விமான நிலையங்களில் சூட்கேஸ்களை மாற்றி எடுத்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், சூட்கேஸ்களில் பயணிகள் வண்ண ரிப்பன் கட்ட விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில், கன்வேயர் பெல்ட்களில் வரும் சூட்கேஸ்களை பயணிகள் தவறுதலாக மாற்றி எடுத்துச் செல்லும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
ஒரே மாதிரியான வடிவம் மற்றும் நிறங்களில் சூட்கேஸ்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் இந்த குழப்பம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. விமான நிறுவனங்கள், ஒவ்வொரு சூட்கேஸுக்கும் அடையாள டேக் வழங்கி, அதற்கான எண்ணை பயணிகளின் போர்டிங் பாஸிலும் ஒட்டுகின்றன.
இருந்தாலும், நீண்ட பயண களைப்பு மற்றும் அவசரம் காரணமாக பலர் டேக் எண்களை சரிபார்க்காமல் உடைமைகளை எடுத்துச் செல்கின்றனர். இதனால், பயணிகள் இடையே வாக்குவாதங்களும் ஏற்படுகின்றன.
இந்த பிரச்சினைக்கு தீர்வாக, இந்திய விமான நிலைய ஆணையம், பயணிகள் தங்கள் சூட்கேஸ்களின் கைப்பிடி அல்லது மேற்பகுதியில் வண்ணமயமான ரிப்பன்கள், ஸ்டிக்கர்கள் அல்லது தனித்துவ அடையாளங்களை பொருத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதன்மூலம், கன்வேயர் பெல்ட்டில் வரும் உடைமைகளை எளிதில் அடையாளம் காண முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், சென்னை விமான நிலையத்தில் கன்வேயர் பெல்ட்களை சுற்றி ட்ராலிகளுடன் கூட்டமாக நிற்பது என்பது மற்றொரு சிக்கலாக உள்ளது.
இதனால், சில பயணிகள் தங்கள் உடைமைகளை எடுக்க முடியாமல், அவை மீண்டும் பெல்ட்டை சுற்றி வர காத்திருக்க வேண்டிய நிலை உருவாகிறது.
எனவே, வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளது போல், பயணிகள் கன்வேயர் பெல்ட்டிலிருந்து சிறிது தூரத்தில் காத்திருந்து, தங்கள் உடைமைகள் வந்தபின் மட்டும் முன்னேறி சென்று எடுக்கும் ஒழுங்குமுறையை சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் அமல்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.