மதுரை: ‘நியோ மேக்ஸ்’ நிறுவன வீட்டு மனைகளை ஏலத்தில் வாங்கும் முதலீட்டாளர்களுக்கு சலுகை வழங்கப்படும் என மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: நியோ மேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்குச் சொந்தமான அசையா சொத்துகளில் டிடிசிபி அங்கீகாரம் பெற்ற மனையிடங்கள் எம்எஸ்டிசி வலைதளம் (www.mstcecommerce.com) மூலம் மின்னணு ஏலம் மார்ச் 17-ம் தேதி தொடங்கி நடந்தது.
சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, ஏப்ரல் 23-ம் தேதி நடக்கவிருந்த சொத்துகள் (திருவாரூர் மாவட்டம் ஆழியூர்) ஏலம் மே 15-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் தங்களது முதலீடு தொகைக்கு மேல் அதிகமான தொகைக்கு ஏலம் எடுத்து இருந்தால், அந்த அதிக தொகையை மட்டுமே செலுத்த வேண்டும்.
இவ்வழக்கின் இறுதியில், பாதிக்கப்பட்ட மொத்த முதலீட்டாளர்களுக்கு திரும்ப கொடுக்கும் தொகையானது, வழக்கின் மொத்த இழப்பீட்டுத் தொகைக்கு நிகராக (100 சதவீதத்துக்கு மேல்) இருக்கும்பட்சத்தில், ஏலம் எடுத்த முதலீட்டாளர்கள் வேறெந்த தொகையும் செலுத்தத் தேவையில்லை.
பிரித்துக் கொடுக்கப்படும் தொகையானது, மொத்த இழப்பீட்டுத் தொகைக்கு (100 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால்) குறைவாக இருக்கும்பட்சத்தில், முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் விகிதாச்சார தொகை போக, மீதமுள்ள தொகையை ஏலம் எடுத்த முதலீட்டாளர்கள் செலுத்த வேண்டும்.
இதில் விருப்பம் இல்லாத ஏலம் எடுத்த முதலீட்டாளர்கள் எந்த நிலையிலும் ஏலத்தில் இருந்து விலகலாம். விலகும் முதலீட்டாளர்களுக்கு, ஏலம் எடுத்ததற்காக செலுத்திய தொகையை எவ்வித பிடித்தமும் இன்றி திருப்பி வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் ஏலத்தில் பங்கேற்று இடங்களை வாங்கினால், அது அவர்களுக்கு ஒரு தீர்வு என்ற நோக்கில் இச்சலுகை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்பேரில் வழங்கப்படுகிறது.
ஏலத்தின்போது, தொழில்நுட்பக் கோளாறு, சந்தேகம் இருந்தால் எம்எஸ்டிசி அலுவலர்களை (94990 54101, 94990 54102) தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.