தமிழகம்

கோயிலில் எப்போதும் தெய்வத்துக்கே முதல் மரியாதை: சென்னை உயர் நீதிமன்றம்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ‘கோயிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்துக்கு தான். சிறப்பு மரியாதைகளை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது’ என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், தேவராஜ சுவாமி கோயிலில், தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு 1992-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பஞ்ச முத்திரை மரியாதை நிறுத்தப்பட்டதை எதிர்த்து ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை தரப்பில், ‘காஞ்சி காமகோடி பீடம் - சங்கர மடம், ஸ்ரீ அகோபில மடம், நாங்குநேரி ஸ்ரீ வாணாமலை மடம், மைசூர் ஸ்ரீ பரகால ஜீயர் மடம், உடுப்பி ஸ்ரீ வியாசராயர் மடம், சோசலே ஆகிய ஐந்து மடங்களின் மடாதிபதிகளுக்கு மட்டுமே சிறப்பு மரியாதைகள் வழங்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘கோயிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்துக்கு தான். சிறப்பு மரியாதைகளை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது’ எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

மடாதிபதிகளுக்கு மரியாதை வழங்குவது குறித்து, அறநிலைய சட்டப்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரியை அணுகி நிவாரணம் கோரலாம் என மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT