சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை (நவ.29) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால் 30-ம் தேதி வாக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது டிச.2-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: லட்சத்தீவின் தெற்குப் பகுதிகளில் இருந்து மத்தியக் கிழக்கு அரபிக்கடல் வழியாக கடலோர கர்நாடகா வரை சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
திருப்பூர், கடலூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.