சென்னை: தமிழகம் முழுவதும் தடையற்ற, சீரான மின்சாரம் கிடைக்க தமிழக அரசு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) தலைவர் ரவிபச்சமுத்து வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்தடை, குறைந்த மின்னழுத்தம், மின்மாற்றி பழுது உள்ளிட்ட பிரச்சினைகளால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. குறிப்பாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நாகவயல், பாடத்தான்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 10 நாட்களாக முறையான மின்சாரம் கிடைக்கவில்லை எனக் கூறி, கிராம மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
அதேபோன்று திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திருவள்ளூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மின் விநியோகம் தொடர்பான புகார்களும் பொதுமக்களின் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. மின்சாரம் என்பது மக்களின் அத்தியாவசியத் தேவை. மாணவர்களின் கல்வி, விவசாயம், குடிநீர் விநியோகம், சிறு தொழில்கள் மற்றும் வணிகம் என அனைத்து தரப்பினரின் அன்றாட வாழ்க்கையும் மின்சாரத்தைச் சார்ந்துள்ளது. மின்சாரம் கேட்டு மக்கள் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் நிலை ஏற்படுவது வேதனையானது.
அதிலும் வேதனையானது, மின்தடை உள்ளிட்ட புகார்களைத் தெரிவிப்பதற்கான மின்னகம் சேவை மையமே சில நேரங்களில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்தியாகும். பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைப்பு முழுத்திறனுடன் செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
எனவே, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் விநியோக நிலையை உடனடியாக ஆய்வு செய்து, பழுதடைந்த மின்மாற்றிகள் மற்றும் மின்பாதைகளை விரைந்து சீரமைப்பதுடன், தமிழகம் முழுவதும் தடையற்ற, சீரான மின்சாரம் கிடைக்க தமிழக அரசு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று ரவிபச்சமுத்து வலியுறுத்தியுள்ளார்.