

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் அசோக் ஆனந்தை அறிமுகம் செய்து வைத்த முதல்வர் ரங்கசாமி
படங்கள் எம் சாம்ராஜ்
புதுச்சேரி: “தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கு பிறகு மாநில அந்தஸ்துக்காக டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன்,” என்று மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. நாளையுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் வேட்பாளரை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி காமராஜர் சாலையில் அமைந்துள்ள சிவகவி ஹோட்டலில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
படங்கள் எம் சாம்ராஜ்
இக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம், அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன், பாமக கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் ஆனந்த் அறிவிக்கப்பட்டார்.
கூட்டத்தில் என்டிஏ தலைவரும் முதல்வருமான ரங்கசாமி பேசுகையில், “அதிக வாக்குகளை பெற்று வெல்ல அனைவரும் பாடுபட வேண்டும். நமது கரத்தையும் ஆட்சியையும் வலுப்படுத்த வேண்டும். என்டிஏ அரசு பல சாதனைகளை செய்து வருகிறது.
புதுச்சேரி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி உறுதுணையுடன் பல திட்டங்களை கொண்டு வருவோம். சிறந்த மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது, இதனை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல இந்த வெற்றி வாய்ப்பு தேவை. எனவே அனைவரும் இணைந்து பாடுபட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் போட்டியிடுகிறார். இவர் கடந்த தேர்தலில் நான் பெற்ற வாக்குகளை விட கூடுதல் வாக்குகளைப் பெறுவார். தேர்தல் முடிந்த பிறகு கூட்டணிக் கட்சிகளுடன் மாநில அந்தஸ்துக்காக டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன்,” என்றார்.