கடலூர் அருகே நடைபெற்ற இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மாநாட்டில் கட்சி நிறுவனர் பாரிவேந்தர், தலைவர் ரவி பச்சமுத்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு (இடது ஓரம்), எம்எல்ஏ அருண்மொழித்தேவன். படம்: எம்.சாம்ராஜ்

 
தமிழகம்

“திராவிட கட்சிகள் வந்த பிறகே தமிழகத்தில் ஊழல் அதிகரிப்பு” - பாரிவேந்தர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திராவிட கட்சிகள் வந்த பின்னர் தான் தமிழகத்தில் ஊழல், லஞ்சம், பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் அதிகரித்தது என கடலூரில் நடைபெற்ற இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மாநாட்டில் அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பேசினார்.

இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மாநாடு கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூரில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தலைமை தாங்கினார். மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

          

இதைத்தொடர்ந்து கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பேசியதாவது: அடிப்படையில் நான் கல்வியாளர். கல்விக்காக நிறைய தொண்டுகள் செய்துவருகிறோம். மக்கள் நலன் கருதியே இந்திய ஜனநாயகக் கட்சியை தொடங்கினோம். இதுவரை 4 சட்டப்பேரவை மற்றும் 3 மக்களவைத் தேர்தல்களை எதிர்கொண்டுள்ளோம். கடந்த 15 ஆண்டுகளாக பாடுபட்டு கட்சியை வளர்த்து மக்களுக்கு சேவை செய்து வருகிறோம்.

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு அத்தொகுதியில் வெற்றிபெற்று என்னவெல்லாம் செய்தேன் என்பதை அறிந்தவர்கள் அறிவார்கள். பெரம்பலூரில் ஐஜேகே கட்சி சார்பில் நடத்தப்பட்ட விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் திரண்ட கூட்டத்தை உளவுத்துறை மூலம் அறிந்த முன்னாள் முதல்

வர் ஜெயலலிதா, அப்போது அதிமுக எம்எல்ஏவாக இருந்த இளவரசனை அழைத்து, அவரை விட்டு விடாதீர்கள், உடனடியாக தோட்டத்திற்கு அழைத்து வாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று அவர் என்னை வலியுறுத்தி அழைத்த போதும் ஜெயலலிதாவை சந்திக்க மறுத்துவிட்டேன். எங்கள் கட்சியின் நோக்கம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது, கல்விக்கு உதவி செய்வது என்ற நோக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறது, கடந்த முறை பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற மக்களவைக்கு சென்றபோது ஏன் வந்தோம் என்றாகிவிட்டது. திமுக உறுப்பினர்கள் பதவியேற்கும்போது தமிழ்நாடு வாழ்க, அக்கட்சியின் தலைவர் வாழ்க என கூறி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

எனக்கு அதில் உடன்பாடில்லை. நான் பதவியேற்றபோது இந்தியா வாழ்க தமிழ்நாடு வாழ்க எனக் கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டேன். ஏன் இங்கே இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் இந்தியா வளர்ந்தால் தமிழ்நாடு தானாக வளரும். அந்த மனப்பான்மை எனக்கு. திமுக எம்.பி.க்கள் திட்டமிட்டே ஒருநாளும் மக்களவையை நடத்த விடமாட்டார்கள். வளர்ச்சியைத் தடுப்பதோடு மட்டுமின்றி வளர்ச்சியையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசோடு எப்போதும் எதிர்ப்பு என்ற நிலை மேற்கொண்டிருந்தால் தமிழ்நாடு எப்படி வளர்ச்சியடையும்? இதனால் இழப்பு தமிழ்நாட்டிற்கு தான்.

திராவிடக் கட்சிகள் வந்த பின்னர் தான் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, மாணவர்களுக்கு மரியாதையும் பாதுகாப்பும் இல்லாத நிலை தான் உருவாகியிருக்கிறது. மக்கள் இதை கவனிக்க வேண்டும். இப்படியே இது தொடருமானால் இளைஞர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பு கிடைக்கும்? வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

திராவிடக் கட்சிகளைக் குற்றம்சாட்டி பாரிவேந்தர் பேசியபோது மேடையில் இருந்த புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித் தேவன், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு ஆகியோர் தர்மசங்கடத்தில் அமர்ந்திருந்தனர். அருகில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் அமர்ந்திருந்தார்.

SCROLL FOR NEXT