சென்னை: காற்றின் தரம், வானிலை, காலநிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் பின்லாந்து நாட்டின் வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து ‘வாயு’ (VAYYU) என்ற மெய்நிகர் ஆராய்ச்சி மையத்தை சென்னை ஐஐடி தொடங்குகிறது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னை ஐஐடி, பின்லாந்து வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து ‘வாயு’ (VAYYU) என்ற அறிவு மையத்தை தொடங்க உள்ளது.
இது ஏரோசால் தூசிப் படலம் - வானிலை இயல் தொடர்புகள், இமயமலை வளிமண்டலம் - கிரை யோஸ்பியர் அடுக்கு இடையிலான தொடர்புகள், நகர்ப்புற காற்று ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் மெய்நிகர் ஆராய்ச்சி மையம் ஆகும்.
பிராந்திய நீர் - காலநிலை (Hydro - Climate), இமயமலையின் பனி, பனியாறு உருகுதல், இந்தியப் பெருநகரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் ஆகியவற்றின் மீது ஏரோசால்கள் (Aerosols) எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நன்கு புரிந்துகொள்ள இந்த மையம் உதவியாக இருக்கும்.
மிக முக்கியத்துறை: சென்னை ஐஐடியின் ஆராய்ச்சித் துறை டீன் சாந்தி பவன், ஐசிஎஸ்ஆர் டீன் மனு சந்தானம், ‘வாயு’ ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் சந்தன் சாரங்கி, பின்லாந்து வானிலை ஆய்வு மையத்தின் தலைமைப் பொறுப்புகளில் உள்ள பேராசிரியர் பெட்டேரி தாலஸ், பேராசிரியர் ஹன்னெல் கோர்ஹனன், டாக்டர் ராகேஷ் கே.ஹூடா ஆகியோர் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி கூறியபோது, ‘‘காலநிலை மாற்றம் மற்றும் கண்காணிப்பு உலகளாவிய தளத்தில் ஆராயப்பட வேண்டிய மிக முக்கியமான துறையாகும்.
இந்த மிக முக்கியமான ஆராய்ச்சியில், பின்லாந்து வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.