

சென்னை: வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் தடத்தில் ரயிலை இயக்கி சோதனை முடிந்துள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்திரி விரைவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் (மேம்பால ரயில்) தடத்தில், தினசரி 100 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.
வேளச்சேரி - பரங்கிமலை 5 கி.மீ. தூரத்தை இணைக்கும் வகையில், பறக்கும் ரயில் வழித்தடதிட்டப்பணி, 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆனால் ஆதம்பாக்கம், தில்லை கங்காநகரில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால் பணிகள் முடங்கின.
கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு, மீண்டும் பணிகள் நடைபெற்றன. 17 ஆண்டுகளாக நடந்து வந்த ரயில் இணைப்பு பணிகள் முடிந்துள்ளன. இதையடுத்து வேளச்சேரியிலிருந்து பரங்கிமலைக்கு, கடந்த நவ.7-ம் தேதி 10 பெட்டிகளுடன் சரக்கு ரயில் இயக்கி சோதிக்கப்பட்டது.
இதையடுத்து 2-வது முறையாக டிச.15-ம் தேதி சரக்கு ரயில் பெட்டிகளுடன் இன்ஜின் இணைந்து இயக்கி சோதிக்கப்பட்டது. இதன்பிறகு பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இப்பாதையில் 2 முறை ரயில் இயக்கி ஆய்வு செய்யப்பட்டது. ரயில் தண்டவாளம், கட்டுமானம், சிக்னல் அமைப்பு ஆகியவை சோதிக்கப்பட்டன. உயர் அழுத்த மின்பாதையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கட்டுமானத்தின் வலிமை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதிவேகத்தில் ரயில் இயக்கி தண்டவாளம் நிலையாக இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. எல்லா சோதனைகளையும் முடித்தபிறகு, இது தொடர்பாக அறிக்கை ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு அனுப்பப்பட்டது.
அவர் தனது ஆலோசனைகளுடன் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கூறியிருந்தார். அந்த திருத்தங்களை செய்து அனுப்பியுள்ளோம். அதை அவர் மீள் ஆய்வு செய்கிறார்.
ஒரு வாரத்தில் இப்பாதையில் ஆய்வு மேற்கொள்ள வருவார் என எதிர்பார்க்கிறோம். ஆய்வு செய்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி கொடுத்த பிறகு, இத்தடத்தில் ரயில் சேவை தொடங்கிவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.