சென்னை: சென்னை ஐஐடி நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உலக அளவில் பெண்களின் உயிரிழப்புக்கு மார்பகப் புற்றுநோய் முக்கிய காரணமாக உள்ளது.
கீமோதெரபி, கதிர்வீச்சு உள்ளிட்ட வழக்கமான சிகிச்சை முறைகள், புற்றுநோய் அல்லாத திசுக்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன. இந்நிலையில், சென்னை ஐஐடி, ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை நேரடியாக புற்றுநோய் செல்களுக்குள் செலுத்தும் நானோ ஊசியை கண்டறிந்துள்ளனர்.
இது மருந்தின் சிகிச்சை செயல்திறனை மேம்படுத்துகிறது. சிகிச்சை செலவுகளையும் குறைக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடி பயன்பாட்டு இயக்கவியல், உயிரிமருத்துவப் பொறியியல் துறை உதவி பேராசிரியர் சுவாதி சுதாகர் கூறும்போது, “மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இந்த நானோ ஊசி, அடுத்த கட்டமாக இதர புற்றுநோய்களுக்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது” என்றார்.