காட்பாடி: “உதயநிதியை கைது செய்வதில் காட்டிய வேகத்தை நயினார் நாகேந்திரன் கைதில் காட்ட முடியாது, அப்படிச் செய்தால் ஒரே நாளில் தவெக ஆட்சியை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வந்துவிடும்” என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு தமிழகத்துக்கு வரும்போது குறைகிறது. கர்நாடகா பகுதியில் நீர் திருட்டு நடைபெறலாம். இதனை கர்நாடகா அரசு கண்காணிக்க வேண்டும்.
நம்மைப் பொறுத்தவரை தமிழக எல்லையான பிலிகுண்டுவில் நீரின் அளவை அளப்போம். அதை வைத்து தான் நமக்கு எவ்வளவு நீர் வருகிறது என்பதை கணக்கிட முடியும். அந்த வகையில் நமக்கு வரவேண்டிய நீரை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். நீர் திருட்டு குறித்து அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நமக்கு வர வேண்டிய நீரை தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும்.
தவெக அரசு 100 நாளை நிறைவு செய்திருக்கிறது. இந்த 100 நாளில் இதைச் சாதித்தோம் என ஏதாவது ஒன்றை சொல்லச் சொல்லுங்கள் பார்போம். 100 நாளில் இமயமலை அளவுக்கு சாதனை செய்ய முடியாது. ஆனால் ஒரு குன்று அளவிற்க்காவது சாதனை செய்துள்ளோம்.
இது நாங்கள் செய்த சாதனை என எதாவது ஒன்றையும் சொல்ல முடியுமா அவர்களால். பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர எந்த காரியத்திலும் தவெக இறங்கவில்லை. தேர்தல் வாக்குறுதிகளில் கொடுத்தவற்றை ஏதாவது ஒன்று செய்திருந்தால் கூட பரவாயில்லை எனச் சொல்லலாம். ஆனால் தேர்தல் வாக்குறுதி பக்கமே செல்லவில்லை.
திமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த உறவும் இல்லை ஒட்டும் இல்லை என நாங்கள் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டோம். கொள்கை ரீதியாகவே அது எங்களுக்கு ஒத்துவராது. எங்களுடைய கொள்கை மரபு வேறு. அரசியல் அளவிலாவது உருப்படுமா என்றால் அதுவும் சரியாக இல்லை. ஏனென்றால் அவர்கள் காவி கலரில் வருகிறார்கள். அது எங்களுக்குப் பிடிக்காது.
ஆனால் ஒருவர் சட்டப்பேரவையில் மத்திய சர்க்காரோடு ஒத்துப் போவேன் என்கிறார். சுதந்திர தின விழாவிலும் மத்திய அரசோடு ஒத்துப்போவேன் எனக்கூறி பாஜகவை ஆதரிக்கிறார். 1969-ல் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் தான் காவிரி உரிமையை விட்டுக் கொடுத்ததாக தமிழ்நாடு முதல்வர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
காவிரி பிரச்சினையை உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்துவிட்டது. அதற்காக கர்நாடகா ஒரு காரணத்தை கற்பித்து வருகிறார்கள். இன்றைக்கு தமிழகத்துக்கு 10 டிஎம்சி வர வேண்டிய தண்ணீர் 7 டிஎம்சி தான் வருகிறது எனக் கூறுகிறார்.
ஆனால் மேகேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. மழைப் பொழிவு உள்ள யாருக்கும் உரிமை கோராத இடத்தில் தான் மேகேதாட்டு அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது.
மேகேதாட்டு தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினை அங்கு அணை கட்டி விட்டால் தமிழ்நாட்டில் பஞ்சப் பிழைப்பு தான் பிழைக்க வேண்டும். டெல்டா பகுதிகள் மிகவும் வறண்டு போய்விடும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வரின் தாய் குறித்து அவதூறாக பேசியதாக வரும் செய்தி குறித்து நான் முழுமையாக படிக்கவில்லை. இருப்பினும், நயினார் நாகேந்திரன் அப்படிப் பேசுபவர் அல்ல. அவர் நிதானமான பேசும் சுபாவம் கொண்டவர். ஆனால் அவர் சேர்ந்து இருக்கும் இடம் அப்படி இருக்குமா எனத் தெரியவில்லை.
பாஜகவோடு ஒத்துப் போகிறேன் என சொல்பவர்கள் எப்படி பாஜகவை அட்டாக் பண்ண முடியும். நான் உனக்கு பல்லக்கு தூக்குகிறேன் என சென்றுவிட்ட பிறகு எப்படி அவர்களை அடிப்பார்கள். உதயநிதியை கைது செய்வதில் காட்டிய வேகத்தை நயினார் நாகேந்திரன் கைதில் காட்ட முடியாது. அப்படி நயினார் நாகேந்திரன் மீது கை வைத்தால் தவெக ஆட்சியை ஒரே நாளில் மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வந்து விடும்.
எம்ஜிஆர் இருந்திருந்தால் இன்றைக்கு இருக்கும் நிலையில் அதிமுக இருந்திருக்காது. எம்ஜிஆர் இல்லாததால் தான் இந்த நிலை. எம்ஜிஆர் இறுதி காலக்கட்டத்தில் அதிமுகவை திமுகவுடன் இணைக்கும் நிலைக்கு வந்தார். அதன்பிறகு அவர் அந்த நிலையை மாற்றிக்கொண்டார். அந்த நிலைப்பாட்டை அவர் எடுத்ததாக பேச்சு வழக்கில் வந்து சொன்னது தான், அதற்கு பெரிய ஆதாரம் எல்லாம் கிடையாது.
தற்போது அதிமுகவில் இருந்து தவெக கட்சிக்கு செல்வது என்பது அது அவர்களின் உட்கட்சி விவகாரம். அது குறித்து ஒன்றும் சொல்ல முடியாது. அவர்களுக்கு சொல்லும் அளவிற்கு நான் பெரிய மனிதன் இல்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இன்றைக்கு பத்திரிகையை புரட்டினால் பக்கத்திற்கு நாலு கொலை, பாலியல் பலாத்காரம் என வருகிறது. அப்படிப்பட்ட செய்திகள் தான் பத்திரிகையில் நிரம்பி வழிகிறது. இப்படித் தான் உள்ளது சட்டம் ஒழுங்கு. ஆனால் இதைப் பற்றி முதல்வர் அக்கறை கொள்ளவில்லை.
இளைஞர் கொலை வழக்கில் கோஷ்டி மோதல் என சொல்கிறார்கள். இது சரியா?. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர் கொலை வழக்கில் கோஷ்டி மோதலாக இருந்தாலும் அடித்துக் கொல்வது சரியா?. இதுவரை எத்தனை பேரை கைது செய்துள்ளீர்கள்?
காட்பாடியில் சமீபத்தில் மட்டும் மூன்று கொலைகள் நடந்துள்ளன. நான் எம்எல்ஏவாக இருந்தபோது மூன்று கொலை நடந்ததாக சரித்திரமே கிடையாது.
காவல் துறைக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளார்களா எனத் தெரியவில்லை?. சட்டம் - ஒழுங்கு முதல்வர் கையில் இருக்க வேண்டும். இங்கு எப்படி உள்ளது, அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை’’ என்றார்.