காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் | கோப்புப் படம் 
தமிழகம்

செங்கல்பட்டு அருகே மரகத முருகர் சிலை மாயம்: உடனடியாக மீட்க அரசுக்கு இந்து முன்னணி வலியுறுத்தல்

மோகன் கணபதி

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், பெருக்கரணை கிராமத்தில் குன்றின் மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நடுபழநி மரகத தண்டாயுதபாணி சிலை திருடப்பட்ட விவகாரத்தில், சிலையை மீட்க தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், பெருக்கரணை கிராமத்தில் குன்றின் மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நடுபழநி மரகத தண்டாயுதபாணி ஆலயத்தில் தெய்வத்திருமேனியை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று இரவு திருடிச் சென்றுள்ளனர். காலையில் கோயில் அர்ச்சகர் கோயிலை திறந்த போது சிலை திருடப்பட்டது தெரியவந்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தங்களது விசாரணை அறிக்கையில், மரகத முருகன் சிலை ரூ.3 லட்சம் செலவில் 2008 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்ததாக அவசர கதியில் தெரிவித்துள்ளனர். இது வேண்டுமென்று கோயில் சிலை திருட்டின் முக்கியத்துவத்தை குறைப்பதாக உள்ளது. பதற்றத்தை குறைக்கும் வகையில் சிலையின் மதிப்பு பற்றி செய்தி வெளியிட்டதைக் கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பல கோயில்களில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கங்கள் திருடு போயுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சிறுகரும்பூரில் கோயிலில் இருந்த மரகதலிங்கம் சில வருடங்களுக்கு முன்பு காணாமல் போனது. இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இதேபோல் திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் பிராணநந்தீஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களிலும் மரகதலிங்கங்கள் திருடப்பட்டுள்ளன. அப்போது சிலை ஆய்வாளர்கள், மரகதலிங்கம் ரூ.500 கோடிக்கும் மேல் மதிப்புள்ளது என தெரிவித்திருந்தார்கள்.

திருவாரூர் தியாகராஜர் கோயில் மற்றும் உத்தரகோசமங்கை கோயிலிலும் மரகத சிலைகள் திருட முயற்சி நடைபெற்றதாக தமிழக அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

தொடர்ந்து தமிழக கோயில்களில் உள்ள சிலைகள், மரகதலிங்கங்கள் திருடப்பட்டு வருவது பக்தர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் உண்டாக்கி உள்ளது.

நடுபழனி மரகத தண்டாயுதபாணி சிலை திருடப்பட்ட விவகாரத்தில், சிலையை மீட்க காவல்துறை உடனடியாக தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து சுவாமி திருமேனிகள் திட்டமிட்டு திருடு போவதற்கு, கோயில் நிர்வாகத்தை கவனிக்கும் இந்து சமய அறநிலையத் துறையின் அலட்சியம் தான் முக்கிய காரணம். பல கோடி ரூபாய் மதிப்புகொண்ட, மக்களின் மனங்களில் வீற்றிருக்கும் தெய்வத்திருமேனியை பாதுகாக்க முழு அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், பக்தர்களிடம் பணம் வசூல் செய்வதிலும் ஊழல்களில் ஈடுபடுவதிலும் தான் அறநிலையத்துறையின் கவனம் இருக்கிறது என்பது பக்தர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இதற்குமுன் திருக்கோயில் பொருட்கள், திருமேனிகள் முதலானவை கடத்தப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு துணைபோன அதிகாரிகள் மீது துறை ரீதியில் கூட கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போதைய ஆட்சியாளர்களாவது, உடனடியாக தமிழக காவல்துறையின் கோயில் சிலை திருட்டு தடுப்பு பிரிவை வலுப்படுத்தி அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து குற்றவாளிகளைக் கண்டு பிடித்து கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT