தமிழகம்

திமுக Vs பாஜக சித்தாந்த போட்டி - திருவண்ணாமலை தொகுதியில் திருப்பம் யாருக்கு?

கோ.வெங்கடேசன்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை என்றாலே அண்ணா மலையார் கோயிலை கடந்து வேறு எதையும் குறிப்பிட முடியாது. பஞ்ச பூதங்களில் அக்னி தலமான அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப பெருவிழா உலக பிரசித்தி பெற்றது. தமிழக சட்டப்பேரவை தொகுதி வரிசையில் 63-வது இடத்தில் உள்ள திருவண்ணாமலை தொகுதியில் ஒரு மாநகராட்சி, ஒரு ஊராட்சி ஒன்றியம் மற்றும் 69 கிராம ஊராட்சிகளை உள் ளடக்கியுள்ளன.

இத்தொகுதியை பொறுத்தவரை யாதவர், ரெட்டியார், நாயுடு மற்றும் முதலியார், வன்னியர்கள், பட்டியலினத்தவர் என பல்வேறு சமூகத்தினர் வசிக்கின்றனர். கடந்த 1951-ம் ஆண்டு முதல் திருவண்ணாமலை சட்டப்பேரவை இதுவரை 16 தேர்தல்களை சந்தித்துள்ளன.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாள ரான தணிகைவேலுவை 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் எ.வ.வேலு வெற்றி பெற்றார். தற்போது, திமுகவில் 4-வது முறையாக அமைச்சர் எ.வ.வேலு போட்டியிடுகிறார்.

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக சி.ஏழுமலையும், தவெக சார்பில் குண்டாஸ் அருள் ஆறுமுகம், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக விக்னேஷ் மற்றும் சுயேட்சைகள் உட்பட மொத்தம் 30 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

தொகுதியில் திமுக, பாஜக இடையிலான சித்தாந்த போட்டியாக திருவண்ணாமலை தேர்தல் களம் அமைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அண்ணா மலையார் கோயில் மாடவீதிகளில் கான்கிரீட் சாலை, திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம், ஸ்டாலின் பூங்கா என பல்வேறு வளர்ச்சி பணிகளை முன் வைத்து எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் மற்றும் ஆதரவாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு திமுக அரசு எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. திமுகவின் நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள், அம்மணி அம்மன் மடம் விவகாரம் உட்பட திமுகவின் இந்து விரோத கொள்கைகள், செயல்பாடுகளை குறிவைத்து பாஜக வேட்பாளர் ஏழுமலையும் வாக்கு சேகரித்து வருகிறார்.

அதேநேரம், திருவண்ணாமலை தொகுதியில் திமுக – பாஜக இடையிலான சித்தாந்த ரீதியிலான போட்டியாக உள்ளது. மேலும், தவெக வேட்பாளர் குண்டாஸ் அருள் ஆறுமுகம், செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் நில எடுப்பை எதிர்த்து நடந்த போராட்ட களத்தையும் தன்னை குண்டாஸில் சிறையில் அடைத்ததற்காக திமுக அரசுக்கு எதிராக தனது பிரச்சாரத்தை கூர்மைப்படுத்தி வாக்கு சேகரித்து வருவது கவனிக்கத்தக்கது.

நீண்ட நாள் கோரிக்கைகள்

* அண்ணாமலையார் கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் தரிசனத்துக்கு தனி வசதி, பக்தர்களின் வாகன நிறுத்தத்துக்கான இடவசதிகளை ஏற்படுத்த வேண்டும். திருப்பதியில் இருப்பது போன்று பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

* அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் நரம்பியல் துறை உட்பட பல்வேறு துறைகளுக்கு போதுமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

* ஈசான்ய மைதானத்தில் உள்ள குப்பை கிடங்கை அப்புறப்படுத்த வேண்டும்.

* திருவண்ணாமலை மாநகராட்சி வார்டுகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

* திருவண்ணாமலையில் அரசு மகளிர் கல்லூரி கொண்டு வர வேண்டும்.

* திருவண்ணாமலை-சென்னை நேரடி ரயில் சேவை ஏற்படுத்த வேண்டும்.

* திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.

* இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு களை உருவாக்கும் வகையில் தொழிற் பேட்டை உருவாக்க வேண்டும்.

திருவண்ணாமலையில் வென்றவர்கள்

  • 1951 -ராமச்சந்திரரெட்டியார் - காங்கிரஸ்

  • 1957 - ப.உ.சண்முகம் - சுயேச்சை

  • 1962 - பி.பழனிபிள்ளை - காங்கிரஸ்

  • 1967 - டி.விஜயராஜ் - காங்கிரஸ்

  • 1971 - ப.உ.சண்முகம் - திமுக

  • 1977 - ப.உ.சண்முகம் - திமுக

  • 1980 - கே.நாராயணசாமி - காங்கிரஸ்

  • 1984 - ஆ.சு.ரவீந்திரன் - காங்கிரஸ்

  • 1989 - கு.பிச்சாண்டி - திமுக

  • 1991 - வே.கண்ணன் - காங்கிரஸ்

  • 1996 - கு.பிச்சாண்டி - திமுக

  • 2001 - கு.பிச்சாண்டி - திமுக

  • 2006 - கு.பிச்சாண்டி - திமுக

  • 2011 - எ.வ.வேலு - திமுக

  • 2016 - எ.வ.வேலு - திமுக

  • 2021 - எ.வ.வேலு - திமுக

வாக்காளர்கள் விவரம்

  • ஆண் - 1,20,961

  • பெண் - 1,28,839

  • மூன்றாம் பாலினத்தவர் - 48

  • மொத்த வாக்காளர்கள் - 2,49,848

SCROLL FOR NEXT