சென்னை: ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை சிறைக்கு அழைத்துச் சென்று சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் அடையாள அணிவகுப்பை நடத்தி உள்ளனர்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுவோர் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், வீரமணி மற்றும் அவரது கார் ஓட்டுநர்கள் லாசர், பார்த்திபன், பாபு ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிறுமியை புழல் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்ற சிறப்பு புலனாய்வுக் குழுவினர், நீதிமன்ற நடைமுறைகளின்படி அடையாள அணிவகுப்பை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, தன்னை காரில் வீரமணியின் வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஓட்டுநர்களைச் சிறுமி அடையாளம் காட்டியதாகக் கூறப்படுகிறது.
ஜான் பாண்டியன் இதனிடையே இந்த வழக்கில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனிடம் 2 மணி நேரம் விசாரணை
நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார் அளித்த வாக்குமூலத்தின் பேரில், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
முன்னதாக பாலியல் விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், இருதரப்பு பிரச்சினைக்காக பேச்சுவார்த்தைக்கு சென்றதாகவும் ஜான் பாண்டியன் ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்தார்.