சென்னை: ‘மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்துவேன்’ என்று உலக மீனவர் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி அளித்தார்.
சென்னையில் ஆளுநர் மாளிகையில், உலக மீனவர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், மீனவர் நல அமைப்புகளின் நிர் வாகிகள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
மீனவர்கள் தங்களின் உயிரை பணயமாக வைத்து மீன்பிடித்து வருகிறார்கள், நாடு முழுவதும் 3 கோடிக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். மீனவர்களின் நலனில் முன்பு ஆட்சி செய்த மத்திய - மாநில அரசுகள் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை. ஆனால் மீனவர்கள் மற்றும் மீனவ மக்களின் வளர்ச்சிக்காக தனி அமைச்சகம் உருவாக்கியவர் பிரதமர் நரேந்திர மோடி. மீனவ சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.
கடல் வளத்தை பாதுகாப்பவர்கள் மீனவர்கள்தான். அவர்கள் நவீன தொழில்நுட்பங்களைக் கற்றறிந்து அதன்படி மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டும்.
மீனவ சமுதாய மக்களை அடிக்கடி சந்தித்து அவர்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்துள்ளேன. மீனவ மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பது உண்மைதான் அவர்களின் கோரிக்கை குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுப்பேன்.இவ்வாறு ஆளுநர் பேசினார்.