அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
Updated on
2 min read

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில் பவாரியா கொள்ளையர்கள் ஒருவருக்கு 5 ஆயுள், இருவருக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2001-06 அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவாகவும் இருந்த சுதர்சனம், பெரியபாளையம் அடுத்த தானாக்குளத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த 2005 ஜன.9-ம் தேதி நள்ளிரவில் இவரது வீட்டுக்குள் புகுந்த பவாரியா கொள்ளையர்கள், சுதர்சனத்தை சுட்டுக்கொன்று விட்டு, வீட்டில் இருந்தவர்களை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பினர்.

அந்த கும்பலை சுட்டுப் பிடிக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஐ.ஜி. ஜாங்கிட் தலைமையில் சிறப்பு தனிப்படை உருவாக்கப்பட்டு, பவாரியா கொள்ளையர்களான ஹரியானாவை சேர்ந்த ஓம்பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோக், ஜெயில்தார் சிங் மற்றும் 3 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

புழல் சிறையில் இருந்த ஓம்பிரகாஷ் உள்ளிட்ட இருவர், வழக்கு விசாரணையின்போது உயிரிழந்து விட்டனர். ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 3 பெண்கள் தலைமறைவாகினர்.

எஞ்சிய ஜெகதீஷ் உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது.

நீதிபதி ஆபிரகாம் லிங்கன் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் ஜி.சீனிவாசன், மகாராஜன் ஆஜராகி வாதிட்டனர். 84 பேர் சாட்சியம் அளித்தனர். 100-க்கும் மேற்பட்ட சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்பு ஆஜரானார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆபிரகாம் லிங்கன், இந்த வழக்கில் கைதாகி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த 21-ம் தேதி தீர்ப்பளித்தார். தண்டனை விவரங்களை நவ.24-ம் தேதி அறிவிப்பதாக கூறியிருந்தார்.

அதன்படி, நீதிபதி ஆபிரகாம் லிங்கன் முன்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட ஜெகதீஷ் உட்பட 4 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சீனிவாசன், ‘‘அமைச்சராக பதவி வகித்தவரை பணம், நகைக்காக இந்த கும்பல் கொலை செய்துள்ளதால், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்’’ என்றார்.

ஜெகதீஷ் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, ‘‘20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பதால், குறைந்தபட்ச தண் டனை வழங்க வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து, ஜெகதீஷ் மற்றும் அசோக் ஆகியோருக்கு 4 ஆயுள் தண்டனையும், ராகேஷுக்கு 5 ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அன்றி, ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 3 பேருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஜெயில்தார் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அவரை விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெகதீஷூக்கு இந்திய தண்டனை சட்டப் பிரிவு (IPC) 396-வது பிரிவின் கீழ் (கொலை, கொள்ளையில் ஈடுபடுவது) ஒரு ஆயுள் தண்டனை, 397-வது பிரிவின் கீழ் (கொள்ளையின் போது துப்பாக்கி போன்ற கொடிய ஆயுதங்களால் தாக்குவது) 3 ஆயுள் தண்டனை என மொத்தம் 4 ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

அசோக்குக்கு ஐபிசி 396, 397-வது பிரிவின்கீழ் தலா ஒரு ஆயுள் தண்டனை, 397-வது பிரிவுடன் இணைந்த 109-வது பிரிவின் கீழ் 2 ஆயுள் தண்டனை என 4 ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. ராகேஷூக்கு 396, 397-வது பிரிவின்கீழ் தலா ஒரு ஆயுள் தண்டனை, 397-வது பிரிவுடன் இணைந்த 109-வது பிரிவின்கீழ் 2 ஆயுள் தண்டனை, ஆயுதச் சட்டத்தின் கீழ் ஒரு ஆயுள் தண்டனை என மொத்தம் 5 ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in